Thursday, February 10, 2022

அன்புள்ள அப்பா

 

ஐஸ் கட்டி , ஐஸ் ஆகுறதுக்கு முன்னாலே தண்ணியாத் தான் இருக்கு. அதுக்கு அப்புறமும் தண்ணியாத் தான் ஆகப் போகுது. நம்ம வாழ்க்கையும் ஐஸ் கட்டி மாதிரி தான். இதுக்கு முன்னால அவன் கிட்டத் தான் இருந்தோம். இதுக்கு அப்புறமும் அவன் கிட்ட தான் போகப்போறோம்.இடையில அவன் டைரக்ட் பண்ற நாடகத்துல ஒரு ரோல் தான் நாம எல்லோருமே. நம்மை உணர்ந்தால் அதுவே போதும். இப்போதைக்கு  ஐஸ் கட்டி மாதிரி உறைஞ்சு  போய் கிடக்கிறோம். ஒன்னு , ஐயோ, இப்படி ஆகிடுச்சேன்னு கடந்த காலத்தைப் பற்றி , நடந்ததை நினைத்து புலம்பிக்கிட்டே -நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்இல்லையா - வருங்கால கனவு கோட்டையிலேயே , கையில் கிடைக்கும் வாய்ப்புக்களை தவற விடுகிறோம்.கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு பொக்கிஷம்... அடுத்த நிமிஷம் நாம இருக்கப் போறது அவன் கையிலேதான். உபயோகப்படுத்திக் கொள்வோம்.



வாழ்க்கை விளையாட்டில் மறைத்து வைத்து இருக்கும் விதி ரொம்ப சிம்பிள். செய்ற வேலையை கரெக்டா செய். நிம்மதியா இரு. உன்னோட குடும்பத்தை , சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக் கொள். இவ்வளவுதான். ஆனால், இதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இதைத் தவிர எல்லாமே நாம் செய்து வருகிறோம்ஓடி ஓடி உழைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே , குடும்பத்தை கவனிக்க கூட நேரம் இல்லாமல் , சந்தோசங்களை தொலைக்கிறோம். எதுவுமே நம் கையில் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை. அதுவே, முற்றிலும் தொலைத்த பிறகு - அது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக தெரியும்.



குறிப்பாக உறவுகள் விஷயத்தில் இது மிகவும் பொருந்தும்.



கீழே ஒரு சம்பவம் கொடுத்துள்ளேன். நிச்சயம் உங்கள் மனதில் சில எண்ணங்கள் ஓடும். நீங்க எப்படி இருக்கிறீங்க? இனிமேல் என்ன பண்ணப் போறீங்கன்னு , ஒரு நாலு வார்த்தை எழுதினா, நம்ம வாசகர்கள் எல்லோருக்குமே சந்தோசமா இருக்கும்... எழுதுறதுக்கு முன்னாலே, நீங்க உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், ஒரு ரெண்டு நிமிஷம் , உங்க அப்பா அம்மாவுக்காகவே ஒதுக்கினா, அவங்க கூட போன்ல பேசினா கூட, உங்கள் சகோதரனா நான் சந்தோசப்படுவேன்..!

*************************************************************

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பகல் பதினோரு மணி. வீட்டுல அந்த இளைஞர் அப்போதான் தூங்கி எழுந்து டிபன் சாப்பிட ஆரம்பிக்கிறார். நைட் எல்லாம் நண்பர்கள் கூட ஆட்டம் போட்டு லேசா ஹேங் ஓவர். சாப்பாடுல உப்பு கம்மி. காரம் அதிகம் ன்னு அம்மாக் கிட்ட ஒரு உறுமல் வேற.  "நாளைக்கு உன் பொண்டாட்டி கிட்ட வக்கனையா வடிச்சுப் போடா சொல்றா"ன்னு அவங்க 'கம்'முன்னு உள்ளே வேலை பார்க்கப் போய்ட்டாங்க. 'ஹால்' ஈசி சேர்ல சோர்வா அந்த இளைஞரோட அப்பா. வாழ்க்கையில ஓடி, ஆடி , அடங்கி கடைசி கட்டத்துல இருக்கிறவர். என்னத்தை வாழுறாங்க இந்த காலத்துப் பசங்கன்னு அவர் முகத்திலேயே அந்த சலிப்பு தெரியுது



இன்னும் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியலையேங்கிற  கவலை. பொறுப்பு இன்னும் பத்தலையே . பிள்ளையை சரியா வளர்த்தோமா? வளர்க்கணும்னு நினைச்சாலும் இந்த சமூகம் வளர்க்க விடுதா? டிவி, இன்டர்நெட் , அரசாங்கமே ஊக்குவிக்கிற டாஸ்மாக் கடைகள் . சொன்னாலும் காது கொடுத்து கேட்குதுங்களா பசங்க...... யப்பா... முடியலைடா.


டிவி ஏதோ 20-20 கிரிக்கெட் மேட்ச். ஆஸ்திரேலியாவும்  ஏதோ இன்னொரு டீமும். நம்ம ஆளு சுவாரஸ்யமா பார்க்குறார். ஹோ..ஜஸ்ட் மிஸ்..! அட அடா ..செம சான்ஸ் ....மிஸ் பண்ணிட்டான்...


"
டே தம்பி.. ! உன்கூட கொஞ்சம் பேசணுமே..!"


"
என்னப்பா வேணும்? மேட்ச் பாக்கறப்போ எதுக்கு டிஸ்டர்ப் பண்றே ?"


"
இந்தியா தான் விளையாடலைலே... என் கூட கொஞ்சம் பேசிக்கிட்டு இரேன்..?"


"
என்ன?" - கூடவே சலிப்பு , முறைப்பு.


"
வா, கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம். "


"
முடியாது...." (கத்துறான்.)


"
தெரு வரைக்கும் தான்டா! ஒரு ரெண்டு நிமிஷம் தான்...."



வர வர வீட்டுல கூட மனுஷன் நிம்மதியா இருக்க முடியலை. அவர்க்கு கேட்கட்டும்னே கொஞ்சம் சத்தமா வார்த்தை.

"சரி வாங்க...!"


வெளியில வரும்போது ... வீட்டு கேட்டுல ஒரு காக்கா உட்கார்ந்து இருக்குது.


"
இது என்ன?" ன்னு பெரியவர் கேட்குறார்.


"
ஏன்? உங்களுக்கு தெரியாதோ? "


"
நீ சும்மா சொல்லேன்..."


"
காக்கா."


திரும்பவும், "இது என்ன? "


"
ஏன்ப்பா ? பயங்கர கோபம்.....வருது. உனக்கு வேலை வெட்டி இல்லைனா கம்முன்னு உள்ளே போய் தூங்கு. இல்லை ஏதாவது ராமாயணம் திருவிளையாடல்னு படம் பாரு. இல்லை புஸ்தகம் படி. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நான் வர்றேன்."


மொபைல் எடுத்து இன்னொரு ப்ரெண்ட்க்கு போன் பண்ணி " மச்சான் படத்துக்கு போகலாமா? இதோ நான் வந்துக்கிட்டே இருக்கேன். நீயும் வந்திடு...."


"
நீ உள்ளே போப்பா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..."


"
டேய் ...தம்பி.... நில்லுடா.. ஒரு ரெண்டு நிமிஷம்.....டே....டே....!"


 
டர்ருன்னு பைக் ஸ்டார்ட் பண்ணி , நம்ம ஆளு மேட்னி ஷோ பார்க்க கெளம்பிட்டாரு.

வயசு ஆயிட்டாலே இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை. ...... சலிச்சுக்கிட்டே தியேட்டர் போயிட்டு , தன்னோட அபிமான நடிகர் படம் பார்க்க ஆரம்பிச்சுட்டான்...!

பெரியவர் மனசு நொந்தபடியே வீட்டுக்குள்ள திரும்பிட்டார்.


"
என்னங்க...? இவனை எங்கே காணும்? "


"
எங்கேயோ சினிமா பார்க்க கிளம்பிட்டான். நம்ம கிட்ட பேச எங்க நேரம் இருக்கு?"


"
நீங்க எதையாவது சொல்லி இருப்பீங்க? சரி நீங்க சாப்பிடுங்க..!"


"
இல்லைமா..! நான் கொஞ்சம் தூங்குறேன்... உடம்பு ஏதோ பண்ணுது.... நீ எழுப்பாதே..! "


"
சரி...!"


"
பத்திரமா இரு... ஜானகி..!"


"
என்ன திடீர்னு...?"


"
சும்மா தான் சொன்னேன்... நான் தூங்கப் போறேன்...! "


"
ம்ம்..."



உள்ளே பொய், தன்னோட பழைய டைரி ஒன்னை எடுத்துப் பார்க்கிறார். ஒரு இருபது , இருபத்தஞ்சு வருஷம் முன்னாலே இருக்கும்.....அதுலே குத்து மதிப்பா... எதோ ஒரு பக்கம்..


படிச்சவர் கண்ணுலே இருந்து இரண்டு சொட்டு கண்ணீர்....


"
ராமா....!"
 
மனசு முழுக்க ராமா ... ராமா ன்னு ஒரே பிதற்றல்.. அப்படியே பாயை விரிச்சு படுத்திட்டார்...
================================

நம்ம ஆளு வெளியில போயிட்டு வந்த களைப்புல உள்ள வர்றார்... "அம்மா..! நான் வெளியில சாப்பிட்டு வந்திட்டேன். கொஞ்ச நேரம் தூங்குறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே"ன்னு உள்ளே போக...
"
டேய் , அப்பா சாப்பிடாம படுத்திட்டார்... அவரை எழுப்பி விட்டுட்டு நீ தூங்கு."


"
உனக்கு வேற வேலை இல்லை..சரி......!"

"
அப்பா ......."


என்ன இது, பழைய டைரி எடுத்திக்கிட்டு , கீழே  பாய்ல படுத்து இருக்கார். தலையணை கூட வைக்கலை.


விரிந்து இருந்த அந்த டைரி பக்கம் கண்ணுல படுது... மணி மணியான எழுத்துக்கள்.

22.12.1987


                                        === 
   ===   
                                         ஸ்ரீராமஜெயம் 


 - இன்று என் வாழ்வின் மிக முக்கியமான சந்தோசமான நாள். என் மகன் நடக்கும் சூட்சுமத்தை கற்றுக் கொண்டு விட்டான். சந்தோசமாக வீட்டு கேட் வரை 'தத்தக்கா , பித்தக்கா' என்று நடந்து வந்தான். அவனுக்கு அது ரொம்ப பிடித்து இருந்தது. அவன் நடப்பதை பார்க்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. கீழே விழப் போனவனை வாரி அணைத்துக் கொண்டேன். கால் வலிக்குமே என்று லேசாக பிடித்து விட்டேன். அந்த சுகம் லேசாக அவன் கண் கிறங்குவதில் இருந்து எனக்குப் புரிந்தது. அப்போது வீட்டு கேட்டில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. எங்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ளவே வந்தது போல இருந்தது.

"ன்ன்னா ?"


இது அவனுக்கே உரிய மழலை பாஷை. எங்கள் இருவருக்கும் இந்த பாஷை தெரியும்.


இது என்ன என்று கேட்கிறான். நான் "காக்கா" என்றேன்.


ஹா.. ஹா... கிக் கிக் .... அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

 

அவன் காக்கா என்று சொல்ல முயற்சி செய்தான் முடியவில்லை. என்  கன்னத்தில் ஒரு முத்தமிட்டான்.....


மறுபடியும், அந்த காகத்தின் பக்கம் கை நீட்டி.... "ன்ன்னா ?"


நானும் காக்கா என்றேன்... திரும்ப கிக் கிக்... முத்தம்....


இப்படியே... இருபத்தேழு தடவை நடந்தது. இருபத்தேழு முறையும் முத்தமிட்டான்.....


நான் இதுவரை பிறந்ததில் இருந்து இவ்வளவு சந்தோசமாக இருந்ததில்லை....!


எனக்கு என் பையன் போதும். ..... அவன் மட்டுமே இனி வாழ்க்கை, மூச்சு , எல்லாமே.!


எனக்கு சக்தி இருந்தால் அந்த காக்காவுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றிலிருந்து தினமும் காகத்திற்கு சாதம் வைத்த பின்பே , நான் சாப்பிடவேண்டும் என்று உறுதி மொழி எடுக்கிறேன்........
============================


ஐயோ... நம்ம அப்பாவுக்கு என் மேல , இவ்வளவு பாசமா? காலைல கேட்டுல காக்கா வந்ததைப் பார்த்திட்டு ரெண்டாம் தடவை கேட்டதுக்கே அவர் மேல எம்புட்டு கோபம் வந்துச்சு...! ச்சே ... நான்லாம் ஒரு மனுஷனா? அவர் கூட மனசு விட்டுப் பேசி.. எவ்வளவு நாளாச்சு.....?

 

"அப்பா.... எழுந்திருப்பா... சாப்பிட்டு தூங்கு...."


 

தியேட்டர்ல விசில் அடிச்சு, கத்தி கத்தி தொண்டை மக்கர் பண்ணியது. அவன் குரலே அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது.



"அப்பா...!"



"
அப்பா...!"


"
அப்பா.........ஆஆஆஆஆஆஆ...."


 

அப்பாவின் உயிர் எப்போதோ பிரிந்து இருந்தது.........

*************************************************************
நாமளும் ஒரு ஜென்மத்து வாய்ப்பை வீணடிக்கனுமா ?அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்துவோமே......!