பாவன நரசிம்மரா இல்லை பவன நரசிம்மரா என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. பின்னர் பாவன நதிக்கரை என்று ஒருவர் தெளிவு படுத்தினார். ஆனால் உடன் வந்த வழிகாட்டியோ பவானி நதிக்கரைன்னு சொன்னார். நல்லவேளை நடிகை பாவனான்னு யாரும் சொல்லவில்லை.
இந்த ஆலயத்தை பற்றி விரிவாக சொல்லணும்னா கருடாத்ரி மலையின் தென்புறம் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓடும் பாவன நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
மேல் அஹோபிலத்தில் இருந்து 8 கி.மீ தொலைவுன்னு சொன்ன நினைவு. ஆனால் கிமீ கணக்கு சரியா கூற முடியாது. ஏனெனில் நடந்து போகும் போது எப்படி கணக்கு பார்க்க முடியும். அதே மாதிரி தான் வாகனத்தில் சென்றாலும். திரைப்படத்தில் காண்பிப்பது போல் பாய்ந்து பாய்ந்து போக வேண்டியதா இருக்கு. உங்க உடம்புக்கு உத்தரவாதம் வேணும்னா தயவு பண்ணி நடந்து போயிடுங்க. இல்லைன்னா முதுகு எலும்பு தனியா கழன்று வந்துடும். 100% உறுதியா சொல்வேன் இங்க போகிற பாதை ரொம்ப ரொம்ப ரொம்ப கடினமாது. வாழ்க்கையில் மறக்கவே முடியாத இடம் இது தான். நடந்து போகிற போது மூங்கில் காடுகளின் வழியாகத்தான் செல்ல வேண்டும். சீரான பாதையும் கிடையாது.
இங்க இருக்கிற நரஸிம்மர் நான்கு கரங்களுடன் மடியில் லக்ஷ்மியை தாங்கியவாறு உட்கார்ந்திருக்கிறார். ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் சக்கரம் கீழ் வலது கரம் அபய ஹஸ்தம் இடது கரம் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்., வாலை சுருட்டியவாறு ஆதிசேஷன் ஏழு தலையோடு நரஸிம்மனுக்கு ஆஸனமாய். இப்படி கஷ்டப்பட்டு பிரயாணம் செய்து அந்த புன்னகை தவழும் சிங்கபிரானை பார்க்கும் போதே அவரை மனசுக்குள் திட்ட வேண்டியதா இருக்கு. அதுவும் பக்தியினால் தான்.
பக்தராமதாசரை சிறைக்காவலர்கள் துன்புறுத்தும் போது உன் ராமனுக்கு அதை பண்ணி போட்டேனே இதை பண்ணி போட்டேனே உனக்கு காதுகளில் ஜிமிக்கி போட்டேனே. வளையல் போட்டேனே இதெல்லாம் யார் கொடுத்த பணம். உங்க அப்பன் வீட்டு பணமான்னு கேட்பார். அந்த மாதிரி செல்லமா நரஸிம்மரை திட்ட வேண்டியதா இருக்கு. இவ்வளவு தூரம் காட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறியே உன்னை பார்க்க நாங்க எவ்வளவு கஷ்டப்படறோம் தெரியுமான்னு சொல்லணும் அவர் கிட்டே.
இங்க இருகிற வரதராஜப் பெருமாள், நவநீத கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், அனுமார் போன்றவர்களும் தரிசனம் கொடுக்கிறார்கள். இவை பரத்வாஜ மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்ள பரத்வாஜ மகரிஷி இங்கு வந்து தியானம் செய்து அந்த பாவம் நீங்கப் பெற்றதாக வரலாறுகள் கூறுகிறது.
லக்ஷ்மியின் பெயர் செஞ்சுலக்ஷ்மி தாயார். வேடுவ குலத்தைச் சேர்ந்தவளாக இங்கு அவதாரம். லக்ஷ்மியை திருமணம் செய்ய நரஸிம்மர் இங்கு தான் வந்தாராம். அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு வந்து வேடுவ குலத்தினர் விழா கொண்டாடுகிறார்கள். பரம்பரை பரம்பரையாகச் சனிக்கிழமைகளில் நரசிம்மருக்குப் பலி கொடுப்பதற்காக இங்கே வரும் குடும்பங்கள் உண்டு. அந்த சமயத்தில் ஆடு, கோழி போன்றவற்றை பலி கொடுக்கிறார்கள். நரசிம்மர் உயிர்பலி அதுவும் இது மாதிரி பலிகளை ஏற்பாரா? இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறதே என்று விசாரித்த போது அதற்கு ஒரு நாட்டுப்புற கதை சொன்னார்கள்.
கிருதயுகத்தில் இந்த மலைத்தொடர்களில் செஞ்சு என்று அழைக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வந்திருக்கிறார்களாம். மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள், காட்டில் வேட்டையாடி பசியை போக்கிக் கொள்ளும் மக்கள், வெளியுலகில் வசிப்பவர்களுடன் எந்த ஒரு வம்பு தும்புக்கும் போகாத அமைதியான காட்டு வாசி மக்கள். அந்த குடும்பத்தில் பிறந்தவள் தான் செஞ்சு லக்ஷ்மி. தாயாரின் மறு அவதாராமத் தோன்றியவள்.
திருமண வயதில் அவளைப் போன்ற அழகிகள் யாரும் இல்லை. அவளை மனைவியாக அடைய ஆண்களுக்கிடையே பலத்த போட்டி. ஆனால் லக்ஷ்மிக்கோ மகாவிஷ்ணுவின் மீது அளவில்லாக் காதல்.
ஹிரண்ய வதம் முடிந்து நரசிம்மர் அகோபில மலைகளில் மிகுந்த ஆக்ரோஷமாக நடமாடிக் கொண்டிருந்த சமயத்தில் அவரைக் கண்டவர்கள் அவருடைய கோரமான முகத்தைக் கண்டு (பின்னே சிங்கம் கோபமா இருக்கும் போது யாரால் அதன் முன்னால் நிற்க முடியும்) செஞ்சுலக்ஷ்மி நரசிம்மரின் பார்வையில் பட அந்த கோரமான உக்ரமான சிம்ம உருவத்தை பார்த்து லக்ஷ்மி நாணத்தால் தலை குனிந்து நின்றாளாம். சரி நமக்கு இந்த அவதாரத்தில் தனக்கு இணையான துணை இவள் தான் என்று தீர்மானித்த நரஸிம்மர் அவளை தன் மனைவியாக்கினார்.
மலைவாழ் பெண்ணை மணந்து, அதனால் அந்த மக்களுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்தாராம். மனைவி சொல்லே மந்திரம்னு சொல்ற மாதிரி மனைவிக்கு பிரியமான உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுப்பாராம்.
தங்களில் ஒருத்தியாகப் பிறந்து வளர்ந்து. நரசிம்மரின் கரம் பற்றிய அன்னை செஞ்சுலட்மிக்குப் பிரியமான உணவைப் படைப்பதற்காகவே இந்த மலைவாழ் இன மக்கள் இங்கே சனிக்கிழமைகளில் பலி கொடுத்து வணங்குகிறார்கள்.
நவக்ரஹங்களில் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களைப் போக்குகிறார் இங்கு காட்சியளிக்கும் நரஸிம்மர்.

No comments:
Post a Comment