இன்னிக்கு
20.6.2021 உலக தந்தையர் தினம் அப்படின்னு ஆரம்பிச்சிருக்காங்க. இதை நல்ல விஷயம்னு சொல்றதா
இல்லை வேலை வெட்டி இல்லாத பசங்களோட வேலைன்னு சொல்றதான்னு தெரியலை. இருந்தாலும் அப்பாவை
பற்றி பேசியே ஆகணும்.
ஒவ்வொருவருக்கும்
அது எந்த வயசா இருந்தாலும் சரி சிலசமயம் அப்பா என்பவர் ஒரு வில்லனாகத்தான் நம் கண்களுக்கு
தெரிவார். சிலருக்கு காமெடி பீஸ் மாதிரியும் ஒரு சிலருக்கு டம்மி பீஸ் மாதிரியும் தெரிவார்.
ஆனாலும் அந்த அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் feeling உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்ட
மாட்டார். வெளிக்காட்டவும் தெரியாது.
வாலிப வயதில் இளமை
முறுக்குடன் துள்ளித் திரியும் ஒரு இளைஞனுக்கு கால்கட்டு என்று சொல்லி கல்யாணம் பண்ணி
வைத்தவுடன் இன்னும் கொஞ்சம் மிடுக்காக மாப்பிள்ளை முறுக்குடன் சுற்ற ஆரம்பிப்பான்.
சில நாட்களில் மனைவி தன் வாரிசை தாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்த
மாப்பிள்ளை முறுக்கு கொஞ்சம் குறைய தொடங்கி விடும்.
குழந்தை பிறந்த
சில வருடங்கள் குழந்தையுடன் கொஞ்சி கொஞ்சி தன்னோட வயதை மறக்க ஆரம்பித்து விடுவான் இந்த
அப்பா என்ற கதாநாயகன். குழந்தையை பள்ளிக்கு சேர்க்க ஆரம்பிக்க வேண்டுமே என்ற நினைப்பு
வர ஆரம்பிக்கும் போது தான் அப்பா என்ற கேரக்டராக உருமாறத் தொடங்குவான் அல்லது அப்பா
என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்திருப்பான்.
குழந்தை வளர வளர
அப்பா என்ற கேரக்டருக்கும் அவனது மனைவிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி வளர தொடங்கும்.
அதை இடைவெளின்னு கூட சொல்ல முடியாது. வெளியில் சென்று வந்தவுடன் குழந்தை எங்கே என்று
தேட ஆரம்பிக்கும் அவனால் தன்னுடைய மனைவியிடம் பேசக்கூட நேரம் ஒதுக்க சிரமப்படுவான்.
நாட்கள் மாதங்களாகி,
மாதங்கள் வருடங்களாகி ஓடும் போது அவனிடம் இருந்த வாலிப முறுக்கு சுத்தமாக அகன்று விடும்.
இப்போது அவன் ஒரு பொறுப்புள்ள தந்தை. மேல்படிப்புக்கு குழந்தையை சேர்க்க வேண்டும்.
என்ன படிக்கலாம் எங்கே சேர்க்கலாம். வெளியூரில் சேர்க்கலாமா? வெளியூரில் சேர்த்தால்
எங்கே தங்க வைப்பது? ஹாஸ்டல் என்றால் சாப்பாடு ஒத்துக்கொள்ளுமா? தன்னால் பணம் கட்ட
முடியுமா? குழந்தையின் உடல்நலம் வெளிச்சாப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமா? இப்படி பல சிந்தனைகள்
அவனை அவன் மனைவியிடம் இருந்து தள்ளியே வைத்துவிடும்.
ஒருவழியாக கல்லூரியில்
இடம் கிடைத்து அதுவும் உள்ளூர் கல்லூரியிலேயே இடம் கிடைத்து விட்டால் சந்தோஷமே. குழந்தையை
பிரியவேண்டும் என்ற ஏக்கம் கிடையாது.
கல்லூரிப் படிப்பும்
முடிந்து வேலை பார்க்கும் படலம் தொடங்க வேண்டும்.
இடையில் அவனோட குழந்தை பொண்ணாக இருந்தால் வீட்டில் மெதுவாக பேச்சை ஆரம்பிப்பார்கள்.
பொண்ணுக்கு வயசாகிட்டு போகுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுத்தா நம்ம பொறுப்பு முடிஞ்சிடும்
அப்படின்னு ஆரம்பிப்பாங்க. (அந்த சமயத்தில் காதல் கீதல்னு காற்றுவாக்கில் செய்திகளும்
காதில் விழ ஆரம்பிக்கும்)
ஒருவழியாக குழந்தையும்
கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள வேலையும் தேடணும். அப்படியே மாப்பிள்ளையும் தேடணும்.
மாப்பிள்ளை தேடும் போது தான் அப்பா என்கிற கதாநாயகனுக்கு தன்னுடைய இளமை பருவம் மீண்டும்
நினைவிற்கு வரும். தான் எப்படியெல்லாம் இஷ்டத்துக்கு சுற்றித் திரிந்தோம். வாலிப முறுக்கில்
என்னல்லாம் அட்டூழியங்கள் பண்ணினோம். நண்பர்களுடன் எப்படியெல்லாம் சுற்றித் திரிந்தோம்
என்று ஒவ்வொன்றாக நினைவிற்கு வர ஆரம்பிக்கும். ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம் என்று
மனதிற்குள் புலம்பிக்கொண்டே அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிப்பான்.
இதெல்லாம் முடிந்த
பின் வீட்டில் தனிமை. அப்போது தான் அவனுக்கு தன்னோட மனைவியின் நினைவு வரும். 20 வருடங்களுக்கு
முன்பு தன்னை நம்பி வந்த தன்னோட மனைவியுடன் இப்போது மனம் விட்டு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லையே
என்ற குற்ற உணர்ச்சி வர ஆரம்பிக்கும்.
தன்னைப் பெற்ற
அம்மாவின் சொல்படி கேட்பதா இல்லை தன்னை நம்பி வந்த மனைவியின் சொல்லை கேட்பதா என்ற பஞ்சாயத்து
தனி டாபிக்.
இது வரைக்கும்
சொல்லப்பட்டவை எல்லாமே அப்பா என்ற ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு
பகுதி மட்டுமே.
இதில் சிலருடைய
வாழ்க்கை முறை வேறாக இருக்கும். அப்பா என்ற ஸ்தானத்தை அடைந்த உடன் சிலர் இன்னும் அதிகமாக
உழைப்பார்கள். ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை பார்ப்பார்கள். அவர்களில் சிலர் பிறந்த
குழந்தையின் முகத்தை பார்க்க கூட நேரம் இல்லாமல் வளைகுடா நாட்டில் எதோ ஒரு பகுதியில்
உழைத்துக் கொண்டு இருப்பார்கள். எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது ஊருக்கு கிளம்பலாம்
என்று இருப்பார்கள். வாரத்திற்கு ஒரு முறை அலைபேசியில் குழந்தை அழைக்கும் அப்பா என்ற
குரல் தான் அவர்களுக்கு ஊட்டச்சத்து, உற்சாகபானம், சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாமே.
தான் பட்ட கஷ்டத்தை
தன்னுடைய குழந்தை படக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்கள் எத்தனையோ பேர். தான் படிக்கவில்லை
தன்னுடைய குழந்தையாவது படிக்கட்டுமே என்று நினைப்பவர்களும் எத்தனையோ பேர். தகுதியை
மீறி கடன் வாங்கி குழந்தையை படிக்க வைப்பவர்களும் இருக்கிறார்கள்.
தாய் தந்தையரின்
அருமை நீ குழந்தையாக இருக்கும் போது தெரியாது. உன் குழந்தையை நீ வளர்க்கும் போது தான்
தெரியும்னு சொல்வாங்க. அது எத்தனை உண்மை அப்படின்னு அப்பாக்கள் தினத்தில் அப்பாவை நினைக்கும்
போது தான் தெரிகிறது.
எத்தனையோ விஷயங்கள்
அப்பா சொல்லும் போது கோபப்பட்டு அப்பாவை திட்டும் நாம் காலப்போக்கில் நம் குழந்தைகளிடம்
அதே விஷயத்தை சொல்லும் போது நாம் அப்பாவிடம் பட்ட கோபத்தை குழந்தைகள் நம்மிடம் காட்டுகிறது.
எதுவுமே நம் நல்லதுக்கு தான் என்று அப்பா சொன்ன விஷயங்களை அப்போது புரிந்து கொள்ளும்
பக்குவம் இல்லாத நாம் அதே விஷயத்தை நம் குழந்தைகளிடம் சொல்லும் போது அவர்கள் அதை ஏற்றுக்
கொள்வது தானே நியாயம் என்ற எண்ணம் தான் பல அப்பாக்களிடம்.
என்னுடைய தகப்பனார்
இறந்து காரியங்கள் செய்து கொண்டிருந்த போது தந்தையுடன் பிறந்தவர்கள் என்னிடம் சொன்னது
‘கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் உன்னை பார்த்துக் கொள்ள’ என்று தான். ஆனால் அதன்
பின் அவர்களை நான் பார்த்ததும் இல்லை. என்னை பார்க்க அவர்களுக்கு நேரமும் இல்லை.
அப்போது தான் தெரிந்தது
அப்பா இல்லாத வாழ்க்கையும் அநாதையாக வாழ்வதும் ஒன்று தான்.
என் குழந்தைக்கு
நான் நல்ல தகப்பனா என்று இந்நேரம் வரை எனக்கு தெரியாது. அவனுக்கு எந்த கெட்ட பழக்க
வழக்கங்களும் நான் சொல்லிக் கொடுத்தது இல்லை. நல்ல பழக்க வழக்கங்கள் தான் சொல்லிக்
கொடுத்து வளர்க்கிறேன். ஆனால் சில விஷயங்கள் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில்
சந்தர்ப்ப சூழ்நிலையும் இப்போதைய communication trendம். எப்படியும் அவனும் தந்தையாகும்
போது ஒரு தந்தையின் வலியை உணர்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
HAPPY FATHER’S
DAY


Superb :)
ReplyDeleteசூப்பர்
ReplyDelete