Sunday, June 20, 2021

சொல்லணும்னு தோணிற்று

 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிலர் அரசாங்கம் இப்படி செய்ய கூடாது அது இதுன்னு பேசிட்டு இருந்தாங்க. ஒவ்வொருவர் வாய். அவரவர் இஷ்டத்துக்கு பேசத்தான் செய்வாங்க. எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நான் செய்வது அடுத்தவனுக்கு பிடிக்காது. அடுத்தவன் செய்வது எனக்கு பிடிக்காது கதை தான். இது இயல்பு. இதை மாற்ற இயலாது..

 

அரசாங்கம் செய்றது நல்லதா கெட்டதா அப்படிங்கற வாதத்துக்கு அப்புறம் வருவோம். பொதுவாக எனக்கு மற்றவர்களை குற்றம் சொல்றத விட நாம என்ன செய்தோம்  அப்படின்னு சுயபரிசோதனை செய்றது தான் உத்தமம் ன்னு நினைக்க கூடிய ஆள் நான்.

 

ஒரு அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து பலர்  பிழைப்புக்காகவும், பணி நிமித்தம் காரணமாகவும் சொந்த ஊர் விட்டு வெளியூர் சென்றார்கள். சிலர் மொத்தமா ஊரே வேண்டாம். இந்த ஊர் உருப்பட வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அங்கயும் லோக்கல் பாலிடிக்ஸ் தான்.  . சிலர் வசதி, உத்யோகம் அப்படிங்கற காரணத்தால் ஊரை விட்டு போனாங்க. . ஊரை விட்டு போன அந்த தலைமுறை ஆட்கள் உயிரோடு இருக்கும் வரை வருடத்தில் ஒருநாளாவது எட்டி பார்த்தாங்க. ஆனால் அடுத்த தலைமுறை ஆட்களோ அந்த ஊருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? தேவையில்லாம அந்த ஊருக்கு எதுக்காக போகணும். அது வேற தண்ட செலவு அப்படின்னு சொல்லிட்டு  ஊர் பக்கம் போறதையே விட்டுட்டாங்க. ஊர்ல ஆட்கள் இருந்த வரை கோவில் நிலம் வருமானம் ஒழுங்கா வந்து பூஜை நடந்தது. ஆட்கள் ஊரை விட்டு போனதும் கோவில் அரசாங்கம் கைக்கு போச்சு. வருமானமா வரவேண்டிய நெல் வராமல் போச்சு. ஸ்வாமி பட்டினியானார்.

 

ஸ்வாமிய நம்பின குருக்களும், அக்ரஹாரத்து ஜனங்கள நம்பின வாத்யாரும் பட்டினியானார். இந்த கஷ்டம் தன்னோட போகட்டும் ன்னு தான் அடுத்த தலைமுறை கோயில் கைங்கர்யம், வைதீகம்ன்னு வரவேண்டாம்ன்னு முடிவு செய்தார். கோவிலும் சிதிலமடைந்து கூட கோபுரமா இருந்த கோவில் எல்லாம் குட்டிச்சுவரா போச்சு

 

சரி இதுக்கு இப்ப என்ன செய்ய ன்னு கேட்டா அடிக்கடி சொல்ற அதே பழைய கதை தான் பரமாச்சார்யா சொன்ன மாதிரி ஒரு குடும்பத்தார் ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசி ஒரு ரூபாய் பணம் (பத்து ரூபாய் கூட எடுத்து வைக்கலாம். மனசு தான் காரணம்) இதே மாதிரி அந்த ஊர்காரங்க பத்து பேர் சேர்ந்து செய்தாலே ஓரளவு அரிசியும் சொற்ப பணமும் அந்த கோவிலுக்கு என வந்து சேரும்.  இப்படி முயற்சி செய்தாலே பல கோவில்ல முதற்கட்டமா ஒரு வேளை பூஜையாவது நடக்கும்...

எதையுமே செய்யாமல் நேபாளத்தில் இருக்குற ஸ்வாமி, காஷ்மீர்ல இருக்குற ஸ்வாமின்னு போட்டோவா தினமும் வாட்சாப்ல ஷேர் பண்றதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. நாம நம்ம ஊர் ஸ்வாமிக்கு ஸ்ரத்தையா பூஜை செய்தால் பாண்டுரங்கன் எந்த ரூபத்தில் த்யானம் செய்தாலும் அதே ரூபத்தில் வருவனாம். அது மாதிரி நம்ம ஊர் ஸ்வாமியும் அதே ரூபத்தில் நிச்சயம் காட்சி தருவார்.

 

ஒரு கை எண்ணெய், ஒரு குடம் ஜலம், ஒரு உருண்டை தளிகை, ஒரு ஹாரத்திக்கு தான் நம்ம ஊர் ஸ்வாமி காத்துண்டு (ஏங்கிட்டு) இருக்கார் அப்படிங்கறதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க.

 

அது நம்ம ஊர் ஸ்வாமி. நம்ம வீட்டு ஸ்வாமின்னு நினைப்பு வந்தால் தான் இதுக்கு விமோசனம்.நாம மட்டும் சாப்பிடறோம் நம்ம ஊர் ஸ்வாமி சாப்பிடுகிறாரா இல்லையான்னு நமக்கு கவலை, நினைப்பு வந்தாலே போதும். ஸ்வாமி நம்மை நோக்கி வர ஆரம்பிச்சிடுவார்.

சொல்லணும்னு தோணிற்று.



Saturday, June 19, 2021

MY DEAR SIN

 இது யாருடைய வாழ்க்கையில் நடந்தது என தெரியவில்லை ஆனால் படிக்க நன்றாக இருந்து. 


*******************

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்...

படித்தில் பிடித்தது.....
என் கண்களிலும் வழிந்தது 😥😥😥


தந்தையர் தினம்

 

இன்னிக்கு 20.6.2021 உலக தந்தையர் தினம் அப்படின்னு ஆரம்பிச்சிருக்காங்க. இதை நல்ல விஷயம்னு சொல்றதா இல்லை வேலை வெட்டி இல்லாத பசங்களோட வேலைன்னு சொல்றதான்னு தெரியலை. இருந்தாலும் அப்பாவை பற்றி பேசியே ஆகணும்.

 

ஒவ்வொருவருக்கும் அது எந்த வயசா இருந்தாலும் சரி சிலசமயம் அப்பா என்பவர் ஒரு வில்லனாகத்தான் நம் கண்களுக்கு தெரிவார். சிலருக்கு காமெடி பீஸ் மாதிரியும் ஒரு சிலருக்கு டம்மி பீஸ் மாதிரியும் தெரிவார். ஆனாலும் அந்த அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் feeling உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்ட மாட்டார். வெளிக்காட்டவும் தெரியாது.

 

வாலிப வயதில் இளமை முறுக்குடன் துள்ளித் திரியும் ஒரு இளைஞனுக்கு கால்கட்டு என்று சொல்லி கல்யாணம் பண்ணி வைத்தவுடன் இன்னும் கொஞ்சம் மிடுக்காக மாப்பிள்ளை முறுக்குடன் சுற்ற ஆரம்பிப்பான். சில நாட்களில் மனைவி தன் வாரிசை தாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்த மாப்பிள்ளை முறுக்கு கொஞ்சம் குறைய தொடங்கி விடும்.

 

குழந்தை பிறந்த சில வருடங்கள் குழந்தையுடன் கொஞ்சி கொஞ்சி தன்னோட வயதை மறக்க ஆரம்பித்து விடுவான் இந்த அப்பா என்ற கதாநாயகன். குழந்தையை பள்ளிக்கு சேர்க்க ஆரம்பிக்க வேண்டுமே என்ற நினைப்பு வர ஆரம்பிக்கும் போது தான் அப்பா என்ற கேரக்டராக உருமாறத் தொடங்குவான் அல்லது அப்பா என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்திருப்பான்.

 

குழந்தை வளர வளர அப்பா என்ற கேரக்டருக்கும் அவனது மனைவிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி வளர தொடங்கும். அதை இடைவெளின்னு கூட சொல்ல முடியாது. வெளியில் சென்று வந்தவுடன் குழந்தை எங்கே என்று தேட ஆரம்பிக்கும் அவனால் தன்னுடைய மனைவியிடம் பேசக்கூட நேரம் ஒதுக்க சிரமப்படுவான்.

 

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடும் போது அவனிடம் இருந்த வாலிப முறுக்கு சுத்தமாக அகன்று விடும். இப்போது அவன் ஒரு பொறுப்புள்ள தந்தை. மேல்படிப்புக்கு குழந்தையை சேர்க்க வேண்டும். என்ன படிக்கலாம் எங்கே சேர்க்கலாம். வெளியூரில் சேர்க்கலாமா? வெளியூரில் சேர்த்தால் எங்கே தங்க வைப்பது? ஹாஸ்டல் என்றால் சாப்பாடு ஒத்துக்கொள்ளுமா? தன்னால் பணம் கட்ட முடியுமா? குழந்தையின் உடல்நலம் வெளிச்சாப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமா? இப்படி பல சிந்தனைகள் அவனை அவன் மனைவியிடம் இருந்து தள்ளியே வைத்துவிடும்.

 

ஒருவழியாக கல்லூரியில் இடம் கிடைத்து அதுவும் உள்ளூர் கல்லூரியிலேயே இடம் கிடைத்து விட்டால் சந்தோஷமே. குழந்தையை பிரியவேண்டும் என்ற ஏக்கம் கிடையாது.

 

கல்லூரிப் படிப்பும் முடிந்து வேலை  பார்க்கும் படலம் தொடங்க வேண்டும். இடையில் அவனோட குழந்தை பொண்ணாக இருந்தால் வீட்டில் மெதுவாக பேச்சை ஆரம்பிப்பார்கள். பொண்ணுக்கு வயசாகிட்டு போகுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுத்தா நம்ம பொறுப்பு முடிஞ்சிடும் அப்படின்னு ஆரம்பிப்பாங்க. (அந்த சமயத்தில் காதல் கீதல்னு காற்றுவாக்கில் செய்திகளும் காதில் விழ ஆரம்பிக்கும்)

 

ஒருவழியாக குழந்தையும் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள வேலையும் தேடணும். அப்படியே மாப்பிள்ளையும் தேடணும். மாப்பிள்ளை தேடும் போது தான் அப்பா என்கிற கதாநாயகனுக்கு தன்னுடைய இளமை பருவம் மீண்டும் நினைவிற்கு வரும். தான் எப்படியெல்லாம் இஷ்டத்துக்கு சுற்றித் திரிந்தோம். வாலிப முறுக்கில் என்னல்லாம் அட்டூழியங்கள் பண்ணினோம். நண்பர்களுடன் எப்படியெல்லாம் சுற்றித் திரிந்தோம் என்று ஒவ்வொன்றாக நினைவிற்கு வர ஆரம்பிக்கும். ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம் என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிப்பான்.

 

இதெல்லாம் முடிந்த பின் வீட்டில் தனிமை. அப்போது தான் அவனுக்கு தன்னோட மனைவியின் நினைவு வரும். 20 வருடங்களுக்கு முன்பு தன்னை நம்பி வந்த தன்னோட மனைவியுடன் இப்போது மனம் விட்டு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லையே என்ற குற்ற உணர்ச்சி வர ஆரம்பிக்கும்.

 

தன்னைப் பெற்ற அம்மாவின் சொல்படி கேட்பதா இல்லை தன்னை நம்பி வந்த மனைவியின் சொல்லை கேட்பதா என்ற பஞ்சாயத்து தனி டாபிக்.

 

இது வரைக்கும் சொல்லப்பட்டவை எல்லாமே அப்பா என்ற ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதி மட்டுமே.

 

இதில் சிலருடைய வாழ்க்கை முறை வேறாக இருக்கும். அப்பா என்ற ஸ்தானத்தை அடைந்த உடன் சிலர் இன்னும் அதிகமாக உழைப்பார்கள். ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை பார்ப்பார்கள். அவர்களில் சிலர் பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க கூட நேரம் இல்லாமல் வளைகுடா நாட்டில் எதோ ஒரு பகுதியில் உழைத்துக் கொண்டு இருப்பார்கள். எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது ஊருக்கு கிளம்பலாம் என்று இருப்பார்கள். வாரத்திற்கு ஒரு முறை அலைபேசியில் குழந்தை அழைக்கும் அப்பா என்ற குரல் தான் அவர்களுக்கு ஊட்டச்சத்து, உற்சாகபானம், சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாமே.


தான் பட்ட கஷ்டத்தை தன்னுடைய குழந்தை படக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்கள் எத்தனையோ பேர். தான் படிக்கவில்லை தன்னுடைய குழந்தையாவது படிக்கட்டுமே என்று நினைப்பவர்களும் எத்தனையோ பேர். தகுதியை மீறி கடன் வாங்கி குழந்தையை படிக்க வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

 


தாய் தந்தையரின் அருமை நீ குழந்தையாக இருக்கும் போது தெரியாது. உன் குழந்தையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்னு சொல்வாங்க. அது எத்தனை உண்மை அப்படின்னு அப்பாக்கள் தினத்தில் அப்பாவை நினைக்கும் போது தான் தெரிகிறது.

 

எத்தனையோ விஷயங்கள் அப்பா சொல்லும் போது கோபப்பட்டு அப்பாவை திட்டும் நாம் காலப்போக்கில் நம் குழந்தைகளிடம் அதே விஷயத்தை சொல்லும் போது நாம் அப்பாவிடம் பட்ட கோபத்தை குழந்தைகள் நம்மிடம் காட்டுகிறது. எதுவுமே நம் நல்லதுக்கு தான் என்று அப்பா சொன்ன விஷயங்களை அப்போது புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத நாம் அதே விஷயத்தை நம் குழந்தைகளிடம் சொல்லும் போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்வது தானே நியாயம் என்ற எண்ணம் தான் பல அப்பாக்களிடம்.

 

என்னுடைய தகப்பனார் இறந்து காரியங்கள் செய்து கொண்டிருந்த போது தந்தையுடன் பிறந்தவர்கள் என்னிடம் சொன்னது ‘கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் உன்னை பார்த்துக் கொள்ள’ என்று தான். ஆனால் அதன் பின் அவர்களை நான் பார்த்ததும் இல்லை. என்னை பார்க்க அவர்களுக்கு நேரமும் இல்லை.

 

அப்போது தான் தெரிந்தது அப்பா இல்லாத வாழ்க்கையும் அநாதையாக வாழ்வதும் ஒன்று தான்.

 

என் குழந்தைக்கு நான் நல்ல தகப்பனா என்று இந்நேரம் வரை எனக்கு தெரியாது. அவனுக்கு எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் நான் சொல்லிக் கொடுத்தது இல்லை. நல்ல பழக்க வழக்கங்கள் தான் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன். ஆனால் சில விஷயங்கள் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் சந்தர்ப்ப சூழ்நிலையும் இப்போதைய communication trendம். எப்படியும் அவனும் தந்தையாகும் போது ஒரு தந்தையின் வலியை உணர்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

HAPPY FATHER’S DAY

 


Friday, June 18, 2021

வேத வித்து -

 



ஈஸ்வராசொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து தற்போது என்னவென்றே தெரியாமல் இருக்கும் துணியை உதறி கையைத் துடைத்துக் கொண்டவர், அப்படியே முள்முள்ளாக இருந்த முன்னுச்சி மண்டையைத் துடைத்துக் கொண்டார். முற்றத்தைக் கடந்து பின் கதவைத் திறந்து புழக்கைடைக்குச் சென்றவர் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த தோய்க்கும் கல்லில் அமர்ந்தார். அவர் பின்னாலேயே வந்த விசாலம், கிணற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டாள்.

 

விசாலம் கேட்டாள்ஏன்னா, போன காரியம் என்னாச்சு? அவா என்ன சொன்னா?”

 

என்னத்தச் சொல்ல விசாலா! அவரும் கையை விரிச்சுட்டார். இந்தக் காலத்திலே போஸ்ட் கிராஜுவேட் படிச்சவனே வேலைக்கு அல்லாடறான் ஸ்வாமி. இதுலே உம்ம பையன் வெறும் பி. . கிராஜுவேட். இங்கிலீஷும் பெரிசா வராது. சமஸ்கிருதத்தையும் தமிழையும் மட்டும் வச்சிண்டு இந்தக் காலத்திலே ஒண்ணுமே பண்ண முடியாது. நீங்க எவ்வளோ பெரிய ஞானி. நீங்க போய் இப்படி உம்ம பையனை கவனிக்காம விட்டுட்டேளெ?” அப்படீங்கறார். இருந்தாலும் சித்த பொறுங்கோ... எப்படியாவது ஒரு வேலை பண்ணி வெக்கறேன்னு சொல்லியிருக்கார்.

 

நான் என்ன பண்றது விசாலம்? நானும் நம்ம கொழந்தே ஒரு வேத வித்தா வரணும்னுதான் அவனுக்கு வேதத்தையும் மந்த்ரங்களையும் பாடம் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா காலம் போற போக்கிலே வேதத்தை ரக்ஷிக்கறதுக்கு யாருமே இல்லேன்னு ஆயிடுத்து. என்னோட வரும்படிக்கேத்த நம்ம கிராமத்து ஸ்கூல்லேதான் சேக்க முடிஞ்சது. கான்வெண்டிலே சேக்கிற அளவுக்கு நமக்கு வசதியில்லே. நான் படிச்சப்போல்லாம் வாத்தியார்லாம் உசுரக் குடுத்து சொல்லிக் குடுப்பா. எனக்கு இங்கிலீஷ் பாஷை தண்ணிபட்ட பாடாயிருக்குன்னா அதுக்கு அவாதான் காரணம். ஆனாக்கா இப்போ இருக்க வாத்தியார்லாம்....”

 

விஸ்வநாதய்யர் பெரிய ஞானி என்பதில் விசாலத்துக்குப் பரம திருப்தி. ஆனா மனசுக்கு திருப்தி தருவதெல்லாம் வயித்துக்குத் திருப்தி தருவதில்லையே…. பாதி நாள் அரை வயிறுதான். ஸ்ரார்த்தம் பண்ணி வைக்கப் போனா இஷ்டப்படி கார்த்தால ஒம்பது மணிக்குள்ளே முடிச்சிட்டு ஆஃபீஸ் போகணும்னு பறக்கறவாளுக்கும் இவருக்கும் ஒத்தே வராது. அதனாலே லீவு நாளாயிருந்தா மட்டும்தான் இவரைக் கூப்பிடுவா. மத்தபடி வேலையிலிருந்து ரிட்டையர் ஆனவா ஒரு ரெண்டு மூணு பேர் இருக்கா. அவா கூப்பிட்டாதான் உண்டு. கல்யாணங்களுக்கும் போறதுண்டு. அங்கேயும் இதே தகறாருதான். மேடையிலே உட்கார்ந்திருக்கற பெண்ணோ பையனோ யாரோடவாது பேசினால் உடனே உர்ருனு கோவம் வந்துடும். “அக்னியை முன்னாடி வெச்சிண்டு இப்படி அபத்தமா பேசக்கூடாது’’ன்னு பொரிஞ்சு தள்ளிடுவார்.

 

பத்திரிகைகள்லேர்ந்தும் மீடியாவிலேர்ந்தும் பல பேர், அப்புறம் உபன்யாசம் பண்றவா சிலபேர், இவரை தேடி வந்து வேதத்திலேயும் உபநிஷதங்களிலேயும் சந்தேகம் கேட்டுண்டு போவா. அப்புறம் அவாளோட கண்டுபிடிப்பு மாதிரி அது உலகத்துக்கு சொல்லப்படும். விஸ்வநாதய்யருக்கு ஒரு வேஷ்டி, துண்டு, வெத்திலை. பாக்கு, பழம்தான். அதுவும் அவர் வேண்டாம்னுதான் சொல்லுவார். இருந்தாலும் இது உங்களை மாதிரி ஒரு வேதவித்தைப் பாக்கும்போது வெறுங்கையோட போகக்கூடாதுன்னு சம்ப்ரதாயம்னு சொல்லி மடக்கிடுவா.

 

வேஷ்டியும் துண்டும் ஈரமாக்கி வயிற்றில் காயப்போட உதவும் பல நாள்.

 

இந்த வீடு கூட யாரோ ஒருத்தர் இவருக்கு தானமாக் கொடுத்தது. இவரோட சின்ன வயசுலேயே இவரோட பாண்டித்யத்தைப் பார்த்த ஒருத்தர் தானமா எழுதிக் கொடுத்தார். இத்தனை வருஷத்தில் அங்காங்கே சுவரில் காரையெல்லாம் பெயர்ந்து, ஓடெல்லாம் உடைந்து போய் மழை பெய்தால் வீட்டுக்குள்ளே இருப்பவர்களை நனைத்துஇதையெல்லாம் சரி செய்யணும்னா நிறைய செலவாகும். எங்கே போறது?

 

இலையைப் போடவா?”

 

ஒன்றும் பேசாமல் கூடத்துக்குள் நுழைந்தார் விஸ்வநாதய்யர்.

 

இலையைப் போட்டு தண்ணீர் தெளித்ததும் காலையில் எடுத்து வைத்திருந்த பழைய சாதத்தைப் போட்டாள் விசாலம்.

 

அவனுக்கு இருக்கா?”

 

கொஞ்சமா சாதம் வடிச்சேன் கார்த்தால. அது அவனுக்கு இருக்கட்டும். நாம பழையதை சாப்டுக்கலாம்

 

எப்போதோ மாங்காய் சீஸனில் போட்டு வைத்திருந்த மாங்காய் வத்தலில் நாலு ஊறவைத்து புளிக்குப் பதில் அதையே ஒப்பேத்தி தோட்டத்தில் விளைந்த ரெண்டு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு ஒரு மாதிரி ரசம் வைத்திருந்தாள் விசாலம். பழைய சாதத்தில் சூடான ரசத்தை விட்டுப் பிசைந்ததும் சாதம் ஒரு மாதிரி ஆகி விட்டது.

 

விசாலா. உன் கைப்பக்குவம் இத்தனை வருஷமாகியும் குறையலேடி

 

நொந்து போன சாதத்திலும் நொந்து போகாத தங்களது தாம்பத்யத்தை நினைத்து மகிழ்ந்தாள் விசாலம்.

 

சாப்பிட்டு விட்டு இலையை எடுத்துத் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாட்டுக்குப் போட்டார் விஸ்வநாதய்யர். அதுவும் பாவம் கறவை நின்று பல மாதங்களாகி விட்டது. இருந்தும் எப்படியோ அதைப் போஷித்து வருகிறார். அதன் கிட்டே போய் அதனைத் தடவிக் கொடுத்தார். அதுவும் தலையை ஆட்டியபடி அவரை நக்க முற்பட்டது.

 

பிராமணனும் பசுமாடும் ஒண்ணுன்னு சொல்லுவாஇப்போ கொஞ்சம் மாத்தி சொல்லணும்வேதபிராமணனும் கறவை நிந்த பசுவும் ஒண்ணு. போஷிக்கறதுக்கு ஆளில்லை.”

 

சாயங்காலம். சந்தியாவந்தனம் முடிந்தவுடன் ஒரு திரி மற்றும் ஏற்றி வைக்கப்பட்ட குத்து விளக்கின் முன் உட்கார்ந்து சுந்தரகாண்டம் வாசித்தார்.

 

விசாலம், அவன் எங்கே?”

 

யாரோ சினேகிதனப் பாக்கப் போறேன்னு கும்மோணம் வரைக்கும் போயிட்டு வரேன்னான். சைக்கிள்ளேதான் போனான். ஒரு வேளை சைக்கிள் பஞ்சராயிடுத்தோ என்னமோ?”

 

ஈஸ்வராகிட்டத்தட்ட இருபது மைலாச்சேஎவ்ளோ தூரம் குழந்தை சைக்கிளை ஓட்டிண்டு போயிருக்கான்? அதுக்கேத்த தெம்பு கூட இல்லையே அவனுக்கு…. பகவானே ஏண்டா எங்களை இப்படி சோதிக்கறே?”

 

எங்கே விசாலம் காதில் விழுந்தால் அவளும் சேர்ந்து கவலைப்படுவாளோ என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டார் விஸ்வநாதய்யர்.

 

கொஞ்ச நேரத்தில் சைக்கிள் மணியின் ஓசை கேட்டது. துருப்பிடித்த அந்த மணி அது மாலிதான் என்று சொல்லியது.

 

எங்கேடா போயிட்டு வரே?”

 

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் மாலி. இருபத்தியஞ்சு வயசாறது. ஆனாலும் இன்னும் ஒரு குழந்தையின் சாயல் அவனை விட்டுப் போகலை. கொஞ்சமும் கல்மிஷம் இல்லாத குணமும் வேத அத்யயனமும்தான் இப்படி ஒரு தேஜஸைக் குடுத்திருக்குன்னு நினைச்சுண்டார் விஸ்வநாதய்யர்.

 

ஒரு கை பிடிங்கோப்பா

 

சைக்கிளின் கேரியரில் இருந்து ஒரு பையை இறக்கினான் மாலி.

 

என்னடா இது?”

 

அப்பா என்னோட சினேகிதன் குமாரசாமியைப் பாக்கப் போனேனோல்லியோஅவன் கொஞ்சம் அரிசியும் காய்கறியும் கொடுத்தான்

 

விஸ்வநாதய்யருக்குப் பெருத்த கோபம் எழுந்தது. “ஏண்டா. எங்கப்பா ஒண்ணும் சேத்து வைக்கலைன்னு சொல்லி கண்டவா கிட்டே பிக்ஷை வாங்கிண்டு வரயா?”

 

அப்பாஏம்பா கோபப்படறேள்? அப்படியெல்லாம் செய்வேனாப்பா? அவனோட தென்னந்தோப்புக்குப் போயிருந்தேன். வழக்கமா தேங்கா உரிச்சிப்போடற ஆள் வரலயாம். அதனால நான் உரிச்சிப் போட்டேன். சினேகிதனாச்சே. காசா எப்படிக் குடுக்கறதுன்னு கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறி எண்ணெய்னு குடுத்து விட்டான்

 

மாலி…” கண்கள் கலங்கியபடி அவனது கைகளைப் பிடித்துக் கொண்டார் விஸ்வநாதய்யர். கைகள் கன்றிப் போய் காய்த்திருந்தன. “வேதத்தை ரக்ஷிக்கறவா இல்லாம போயிண்டிருக்கா இந்த லோகத்துலே. ஆனா அதுக்கு நீ பலியாகணுமா?:

 

பேசமுடியாமல் உள்ளே கை காட்டினார். அவனும் புரிந்து கொண்டு கைகால் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.

 

உழைத்த களைப்பில் தூங்கி விட்டான் மாலி. விசாலமும் விஸ்வநாதய்யரும் தூக்கம் வராமல் துக்கத்தில் உழன்றனர்.

 

அமாவாசைக்கு மூன்று நாட்களே இருந்ததால் நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன.

 

விசாலா. இதுக்காகவா நான் இவனை வேதம் படிக்க வெச்சேன்? தேங்காய் உறிக்கவா….”

 

பகவான் நம்மளை சோதிக்கறான். வேறென்ன சொல்றதுஇந்தக் கஷ்டத்தையெல்லாம் நாம பாக்கணும்னு இருக்கே.. அதை நினைச்சாத்தான்….”

 

என்ன சொல்றே விசாலா.. நாமளும் போயிட்டா அந்தக் குழந்தைக்கு யாரு கதி? இன்னும் ஒரு வேலை பண்ணி வெக்கலேஅதுக்கப்புறம் கல்யாணம் கார்த்தின்னு ஆகணும்…. இதையெல்லாம் பாக்கணும்னு ஆசையில்லையா உனக்கு?”

 

இதெல்லாம் மாயைன்னு நீங்கதானே சொல்லுவேள்?”

 

விசாலா….”

 

அவர் குரலில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்து பயந்துபோனாள் விசாலம்.

 

ஷமிக்கணும். நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?”

 

இல்லே விசாலாநான்தான் எதோ அஞ்ஞானத்துல பேசிட்டேன்…”

 

எது ஞானம் எது அஞ்ஞானம்னு தெரியாமலே தூங்கிப் போனாள் விசாலம்.

 

இரண்டு நாட்களாக வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் தோட்டத்திலேயே ஏதேதோ செய்து கொண்டிருந்தான் மாலி. மண்டிக்கிடந்த புதர்களை அகற்றினான். புதிதாக விதைகளை ஊன்றினான். எங்கிருந்தோ போய் லக்ஷ்மிக்கு புற்கள் பறித்து வந்தான். ராத்திரி சீக்கிரமே தூங்கப் போய்விட்டான்.

 

எப்போதும் காலையில் விஸ்வநாதய்யர்தான் சீக்கிரம் எழுந்திருப்பார். அன்று மாலி முந்திக் கொண்டான். காலை நாலு மணிக்கே எழுந்து குளித்து விட்டு ஜபதபங்களை முடித்து விட்டுக் கையில் ஒரு பையுடன் கிளம்பி விட்டான். போகும்போது எங்கே போகிறாய் என்று கேட்க மனமில்லை விஸ்வநாதய்யருக்கு.

 

சைக்கிள் தெருமுனையில் உருண்டோடி மறையும் ஓசை கேட்டது.

 

எங்கே போறான் இவ்ளோ காலங்கார்த்தாலே?”

 

எனக்குத் தெரியலேகாலங்கார்த்தாலே நாலு மணிக்கெல்லாம் எழுப்பும்மான்னான். ஆனா நான் எழுப்பறதுக்கு முன்னாடியே அவனே எழுந்துண்டுட்டான்.”

 

மறுபடியும் தேங்காய் பறிக்கவா?”

 

அதுக்கு இவ்ளோ காலங்கார்த்தாலேயா?”

 

ஈஸ்வராஇந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல வழி காட்ட மாட்டியா?”

 

மாலி கொண்டு வந்த அரிசியும் பருப்பும் இன்னும் ஒரு வாரத்துக்கு வரும். கார்தாலயே சுடச்சுட சாதம் போட்டாள் விசாலம். வாழையிலையில் சுடச்சுட போட்டதும் ஆவி எழுந்து நாசியை நிறைத்தது. பையன் என்ன பண்றானோ என்ற விசாரத்திலேயே அவரால் அந்த மணத்தை அனுபவிக்க முடியவில்லை.

 

மதியம் மூணு மணி இருக்கும். சற்றே திண்ணையில் கண்ணசந்த விஸ்வநாதய்யர் சைக்கிளின் ஒலி கேட்டுக் கண் விழித்தார்.

 

மாலிதான். சைக்கிளில் ஒரு மூட்டை. வழக்கத்திற்கு மாறாக மேலே சட்டையில்லை.

 

என்னடா இது?”

 

ஒரு கை பிடிங்கோப்பா

 

இறக்கியதும் உள்ளே கொண்டு போனான் மாலி.

 

மூட்டையைப் பிரித்து உள்ளே இருந்ததை எடுத்து வைத்தான் மாலி.

 

அரிசி, பருப்பு, வாழைக்காய்கள். எண்ணெய், நாலு வேஷ்டி. துண்டு. ஒரு புடவை.

 

விஸ்வநாதய்யருக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

 

மாலி. என்னடா இதெல்லாம்? இன்னிக்கும் தேங்கா உறிச்சியா?”

 

இல்லேப்பா

 

பின்னேஇதெல்லாம் ஏதுடா?”

 

அப்பா இன்னிக்கு அமாவாசையில்லையா. அதான் தர்ப்பணத்துக்குப் போயிருந்தேன்

 

மாலி…. வேணாம்டா…. வேண்டவே வேண்டாம்…. நீயும் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாம்டா.. எங்கேயாவது ஒரு நல்ல வேலை பாத்து வெக்கறேன்கொஞ்சம் பொறுமையா இருடா

 

ஏம்பாஇதிலென்னப்பா தப்பு….”

 

வேண்டவே வேணாம்டா.. இது கலிகாலம். வேதத்தை ரக்ஷிக்கறவா கொறஞ்சு போயிட்டாகலி முத்திப் போச்சு…. வேதத்தை நம்பி நம்மால ஜீவனம் பண்ண முடியாதுடா

 

இல்லேப்பா…. இன்னிக்கு மட்டும் நாலு எடத்துக்கு தர்ப்பணத்துக்குக் கூப்பிட்டாப்பா…. எல்லாம் என்னோட சினேகிதன் குமாரசாமியோட பங்காளிகள். கையிலே நிறைய தக்ஷிணையும் தந்தா

 

ஈஸ்வரா….அவாள்லாம் அப்ராமணாளாச்சேடாதக்ஷிணைக்காக என்ன வேணாம்னாலும் பண்ணலாம்னு நினைச்சிட்டியா? வேதத்தை நல்ல விலைக்கு விக்க ஆரம்பிச்சிட்டியா? இதுபெரிய பாவம்டா..:”

 

அப்பா வேதத்தை ரக்ஷிக்கறதுன்னா என்னப்பா?”

 

என்னடா. ஸ்வாமி மலையிலே பொறந்ததுனாலே அப்பனையே கேள்வி கேக்கறயா?”

 

அப்பா அப்படி இல்லேப்பாதயவு செஞ்சி சொல்லுங்கோளேன்

 

வேதத்தை அத்யயனம் பண்றது, வேதம் சொல்றது, அடுத்த தலைமுறைக்கு வேதத்தை எடுத்துண்டுபோறதுஇதெல்லாம் தான் வேத ரக்ஷணம்

 

அப்போ அதை வேதம் படிக்கறதுக்கு நமக்கு மட்டும்தான் உரிமை இருக்குன்னு சொல்ற நாம செய்யணுமா? இல்லே வேதத்தையே தொடக்கூடாதுன்னு ஒதுக்கி வைக்கப்பட்டவா செய்யணுமாப்பா?”

 

மாலீ……”

 

சொல்லுங்கோப்பா,,, வேதம் படிக்கறதுக்குன்னே பொறந்தவா நாமன்னு சொல்றேளே. அப்போ நாமதானே வேதத்தை ரக்ஷிக்கணும்?”

 

விஸ்வநாதய்யருக்கு ஏதோ ஒன்று உலுக்கியது போலிருந்தது.

 

வேதம் படிக்கற பிராமணாளை ரக்ஷிக்கலைன்னு சொல்லுங்கோ. நான் ஒத்துக்கறேன்..ஒரு காலத்துலே ஒசந்த குலம்னு சொல்லிண்டு எல்லார்கிட்டேந்தும் ஒதுங்கி நின்னோம். இப்போ? நீங்கள்லாம் ஒசத்தின்னு மத்தவா நம்மளை ஒதுக்கி வைக்கறாஇதிலே யாரைப்பா குறை சொல்றது? அப்ராமணாள்னு சொன்னேளே…. எல்லா ஆத்மாவும் ஒண்ணுதானேன்னு ஆதிசங்கரருக்கு அந்த சங்கரனே புரியவைக்கலயாப்பா? ஜீவனோட இருக்கும் ஆத்மாவே ஒண்ணுங்கிறபோது ஜீவன் போனதுக்கப்புறம் ஏதுப்பா வித்யாசம்? அந்த ஆத்மாக்களும் பித்ருக்கள் தானேப்பாஎல்லா ஆத்மாவையும் ஒண்ணா பாவிச்சு கரை சேத்து விடறதுதானேப்பா ஒரு வேதம் படிச்ச பிராமணனோட கடமை?”

 

விஸ்வநாதய்யர் திண்ணையில் சரிந்தார்.

 

ஆனா ஒரே நாள்லே நாலு எடத்துக்கா? எப்படிடா? ஒரு ஸ்ரார்த்தத்துக்கே அரை நாள் வேணுமேடா.. அவாளோட அவசரத்துக்காக மந்த்ரங்களைக் குறைச்சு பின்னமாக்கி சீக்கிரமா முடிச்சு ஒரே நாள்லே நாலு எடத்துக்குத் தர்ப்பணத்துக்குப் போனியா?

 

ஒரே நாள்லே நாலு எடத்துலே தர்ப்பணம் பண்றது சாஸ்த்ர விரோதம்தான். இல்லேங்கலே. ஆனா யோசிச்சுப் பாருங்கோப்பாஇன்னைக்கு இருக்கற அவசர உலகத்துலே அரை நாள் செலவு பண்ணி தர்ப்பணம் பண்றதுங்கறது எல்லாராலும் முடியுமா? இப்போ நாம ஏன் அரை வயிறும் கால் வயிரும் சாப்பிட்டு உயிரோட இருக்கணும்னு பாக்கறோம்?

 

நாம உயிரோட இருந்தாத்தானே வேதத்தை அத்யயனம் பண்ண முடியும்? அது மாதிரித்தாம்பாஇந்தக் கலியுகத்திலே தர்மதேவதையே ஒரு காலோட நிக்கறான்னு சொல்றோமே. அது மாதிரி இப்போ நான் அவாளுக்கு ஏத்தா மாதிரி தர்ப்பணத்தை சீக்கிரமா பண்ணி முடிக்கலேன்னா தர்ப்பணமே வேண்டாம்னு போயிடுவாஅதுக்கு இது பரவாயில்லை இல்லையா?”

 

விஸ்வநாதய்யரின் கண்களில் நீர் பெருகியது.

 

ஏதோ கொஞ்சமாவது வேதத்து மேலயும் சம்ப்ரதாயங்கள் மேலேயும் ஜனங்களுக்கு நம்பிக்கை இருக்கே அதை நினைச்சு சந்தோஷப்படணும்பா…. இது பூர்ணமில்லேதான். ஆனா பூஜ்யமுமில்லேப்பா….”

 

மாலி மெதுவாக விஸ்வநாதய்யரின் பாதங்கள் அருகில் உட்கார்ந்தான்.

 

அப்பாநீங்கதானேப்பா சொல்வேள்பிராம்மணனாப் பிறக்கறது ரொம்ப உசந்த பாக்கியம். அப்புறம்தான் ஒரு ஆன்மா மோட்சத்துக்குப் போகும்னுஅப்போ உசந்த ஜென்மா மட்டும் வேணும். அதுக்கேத்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாதுன்னா எப்படிப்பா? கால் வயிறு அரை வயிறானாலும் வேதத்தை நாமதானேப்பா ரக்ஷிக்கணும்?”

 

அவரது மடியில் தனது தலையைச் சாய்த்தான் மாலி.

 

அப்பா நான் ஏதாவது தப்பாப் பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்கோ.”

 

மாலீ…. ….” விஸ்வநாதய்யரின் கைகள் உயர்ந்து கும்பிட்டன.

 

ஸ்வாமிமலைக் கோவிலிலிருந்து சாயரட்சை பூஜைக்கான மணி ஒலித்தது.


 thanks to original uploader of this article


பின் குறிப்பு: படத்திற்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லை. படத்தில் இருப்பவர் ஹம்பியில் இருக்கும் சிவனுக்கு அர்ச்சனை பண்ணும் முதியவர். சமீபத்தில் கைலாஸ பதவி அடைந்து விட்டார். வயதானாலும் சிவத்தொண்டை விடக்கூடாது என்ற வைராக்யம் அவருக்கு. அது போலத்தான் இந்த சம்பவத்தின் கருத்தும். எந்த பாடுபட்டாவது வேதத்தை நாம் ரட்சிக்க வேண்டும்.