Sunday, June 6, 2021

ஆபத்தான ஆனந்தமான அகோபிலம் பயணம் - பகுதி 1




இது நடந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாகி விட்டது. இப்போ நினைச்சு பார்த்தா கூட போய்ட்டு வந்தது எல்லாமே பிரமையா இருக்கு. பிரமிப்பா இருக்கு.



2007ல் சென்னையில் இருக்கும் போது எங்கள் வாடிக்கையாளர் திரு. ஜெகந்நாதன் அப்படின்னு ஒருத்தர் அடிக்கடி வருவார். அவரிடம் அகோபிலம் போகணும்னு என்னோட ஆசையை சொல்லிக் கொண்டே இருப்பேன். கிட்டத்தட்ட 1987ல் இருந்தே அந்த ஆசை இருந்தது. என்ன தான் சோளிங்கர், பரிக்கல், பூவரசன்குப்பம்னு நரசிம்மர் கோவிலா போய் தரிசனம் பண்ணினாலும் கூட இங்கு போகலைன்னு வருத்தம் மனதிற்குள் இருந்தது.



திடீர்னு ஒரு நாள் ஆகஸ்ட் 13ந் தேதி திரு. ஜெகந்நாதன் என்னை சந்தித்து அமைந்தகரையில் இருந்து ஒரு குரூப் இன்னிக்கு அகோபிலம், மந்த்ராலயம், மகாநந்தி கிளம்பறாங்க அப்படின்னு சொல்லி ஆசையை கிளப்பி விட்டார். ஒரு ஆளுக்கு 2000 ரூபாய்னு சொன்னார். நான், மனைவி, குழந்தை மூணு பேரும் உடனே கிளம்பறோம்னு சொல்லி கன்பார்ம் பண்ணிட்டோம்.



ராத்திரி 7 மணிக்கு கோயம்பேட்டில் ஒரு இடத்தை சொல்லி அங்க வந்து காத்திருக்க சொன்னார். நாங்கள் எங்களுடைய ஆட்டோ ஓட்டுநருடன் அங்கு வெகுநேரம் காத்திருந்தோம். யாருமே வரலை. திடீர்னு ஒரு ஐயங்கார் மாமா அங்கு வர அவரிடம் விசாரித்தோம். அவர் உங்களுக்காகத்தான் அமைந்தகரையில் பஸ் காத்துக் கொண்டிருக்கிறது உடனே இந்த அட்ரஸுக்கு போங்கோன்னு (துரத்தி விட்டார்னு தான் சொல்லணும்) சொன்னார்.




எங்கள் ஆட்டோ ஓட்டுநருடன் அந்த இடத்திற்கு விரைந்து செல்ல எங்களுக்காக காத்திருந்தவர்கள் மனதிற்குள் எங்களை திட்ட நாங்களும் இடம் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம்னு சொல்லி எங்களுக்கென ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து கொண்டோம்.



பார்த்தசாரதி என்பவர் தான் டூருக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். அவரிடம் ஜெகந்நாதன் அனுப்பின விவரத்தை கூறினோம். ஜெகந்நாதன் எங்களுடன் வர இருந்தார். ஆனால் கடைசி நிமிடங்களில் அவரால் வர முடியவில்லை.



சரியாக 8.30க்கு பஸ் கிளம்பியது. கொஞ்ச நேரத்திலேயே என்னோட பையன் அவனோட விஷமத்தனத்தை ஆரம்பிக்க சுளீரென ஒரு அடி அவனுக்கு. அப்போது அவனுக்கு வயது 5 நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்தவர் குழந்தையை அடிக்காதீங்க. என் கிட்டே விடுங்க நான் பார்த்துக் கொள்கிறேன்னு கூற அவருடைய இருக்கைக்கு பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான். அவர் பெயர் ராஜேந்திரன். எண்ணூர் foundries companyல் வேலை பார்த்து கொண்டிருந்தார். இன்றுவரை எங்கள் நட்பு நரசிம்மனின் அருளால் தொடர்கிறது.



ஒரு மணி நேரத்தில் வயிற்றில் இருந்து கன்னியாகுமரியின் வயலின் ஓசை கேட்க விக்கு விநாயகராம் கடம் வாசிப்பது போலவும் இருக்க பேருந்து ஓட்டுநரிடம் விஷயத்தை கூற அவர் ஒரு கடை வாசலில் பேருந்தை நிறுத்தி பாத்ரூம் போறவங்க போய்ட்டு வாங்கன்னு சொல்லி அவரும் இறங்கிட்டார். துள்ளி ஓடும் கன்றுக்குட்டியை போல நான் மறைவிடம் போய் இயற்கை உபாதையை கழித்து விட்டு வயிற்றுக்குள் இசை அரங்கம் செய்து கொண்டிருந்த கன்யாகுமரி, விக்கு விநாயகராம், ஜாகீர் உசேன் வகையறாக்களுக்கு விடை கொடுத்து அனுப்பினேன். மறுபடியும் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு வந்திருந்த சப்பாத்தி தக்காளி சட்னியை கபளீகரம் செய்ய ஆரம்பித்தேன்.




மீண்டும் பேருந்து செல்ல ஆரம்பித்தது. ஆந்திரா எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 12 மணிக்கு பேருந்தை வழிமறித்த ஆந்திர காவல்துறை பேருந்துக்குள் ஏறி சந்தேகப்படும்படி யாராவது இருக்கிறார்களான்னு பார்த்து சோதனை செய்து எங்கள் பயணத்தை தொடர அனுமதித்தார்கள். அப்போது தான் ஒவ்வொருவரையும் கவனித்தேன். ஒவ்வொருவரையும் கவனித்தேன்னு சொல்றதை விட ஒவ்வொருத்தர் விடும் குறட்டைகளை கவனித்தேன். காணாமல் போன வயலின் வித்வான்கள் மீண்டும் குறட்டை வடிவில் வந்துவிட்டிருந்தார்கள். குறட்டைகள் பலவிதம். சிலர் விடும் குறட்டைகள் வாய் வழியாக. வேறு சிலரே வேற வழியாக (சிரிக்காதீங்க. பஸ் நிற்கும் போது தான் இந்த மாதிரி சத்தம் எல்லாம் கேட்கும். ஆனால் ஒன்னுமே தெரியாத மாதிரி தூக்கத்தை தொடர்வாங்க பாருங்க அந்த நடிப்பிற்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்)

அந்த குறட்டை கச்சேரிகளை கண்டு ரசித்தவாறே நானும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தேன். விடியற்காலை 5.30க்கு முழிப்பு வந்துவிட்டது. கடப்பா தாண்டி கர்நூல் கடந்து அல்லகட்டாவில் இருந்து அகோபிலத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்ததை அங்கிருந்த வழிகாட்டும் போர்டு வாயிலாக அறிந்து கொண்டு மனைவியை எழுப்பினேன். இன்னும் அரை மணி நேரத்தில் அகோபிலம் வந்துடும்னு சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்தேன். லேசாக விடியத் தொடங்கிய வானம். அதை ரசிப்பதே தனி ஆனந்தம். ரோட்டின் இருபக்கமும் பெரிய பெரிய மரங்கள். செம்மண் பூமி போலும். ஏற்கனவே விகடனில் 1950களில் வந்திருந்த அகோபில பயண கட்டுரை படித்திருந்த காரணத்தால் மனதிற்குள் பயம். திடீர்னு எங்கிருந்தாவது கரடியோ புலியோ பாய்ந்து வந்தால் என்ன பண்றதுன்னு.

ஜிலேபியை பிய்த்து போட்டிருந்த மாதிரி எழுத்துக்கள் அகோபிலம் 20 கிமீ, 19 கிமீ என்று ஒவ்வொரு கிலோமீட்டராக குறைந்து கொண்டே வர வர மனதிற்குள் சொல்லத் தெரியாத ஒரு சந்தோஷம். அது சந்தோஷமா ஆனந்த அழுகையான்னு தெரியலை. நரசிம்மர் குலதெய்வமாக இருந்தாலும் அகோபிலம் அவதாரம் பண்ணின இடம். அந்த இடத்திற்கு நம்மை எந்த சிரமமும் இல்லாமல் அழைத்து செல்கிறாரே என்ற சந்தோஷம்.

இறங்கிட்டோம் அகோபிலத்தில். பேருந்தை பார்த்ததும் லோக்கல் டூரிஸ்ட் கைடுகளின் வண்டி மறிப்பு வியாபாரம். பிரம்மா என்ற கைடு எங்களை ஒரு இல்லத்திற்கு அழைத்து சென்று அங்கு தங்க ஏற்பாடு செய்தார். நாங்கள் 35 பேர் வரை இருந்தோம் என்று அப்போது தான் எனக்கு தெரிந்தது.



விறுவிறுவென்று குளித்து கீழே இருக்கும் லக்ஷ்மி நரஸிம்மர் ஆலயத்திற்கு (ஓடி) சென்றேன். என் ஸ்வாமி அவதாரம் பண்ணிய இடத்தில் என் பாதமா என்ற அழுகை வேறு. அது ஊர் ஆலயம்னு சொன்னார்கள். பக்கத்திலேயே அகோபிலம் மடம். தமிழ் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். உள்ளே சென்று லக்ஷ்மி நரஸிம்ம மூர்த்தியை தரிசித்து வெளியே வந்த நான் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து போய் நரஸிம்மா என்று கூவி விட்டேன் என் எதிரில் இருந்தவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டேன். காரணம் என் எதிரில் இருந்தவர் சாக்ஷாத் லக்ஷ்மி நரசிம்மனை போல இருந்தது தான் காரணம். பின்னர் விசாரித்ததில் அவர் அந்த ஆலயத்தில் பூஜை செய்கிறவர் என்றும் அவருடைய மனைவி பிரசவத்திற்காக நந்தியால் சென்றிருக்கிறார் என்றும் இவர் தீக்ஷையில் இருக்கிறார் என்றும் தெரியவந்தது.


மனைவி குழந்தைகளை அழைத்து வரவில்லையா என அவர் கேட்க எனக்கு அப்போது தான் மனைவி, குழந்தை ஞாபகமே வந்தது. மனம் முழுவதும் நரஸிம்மன் நிறைந்திருக்கும் போது கட்டினவளை கூட மறந்துவிட்டேன். பிறகு காலை ஆகாரத்தை முடித்து விட்டு அனைவரும் ஆலயத்தை நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம்.

முதல்நாள் திட்டப்படி முதலில் நாங்கள் தரிசிக்க இருந்தது பாவன நரஸிம்மர்.

ஜீப்பில் போனால் 21 கிமீ. நடந்து போனால் 8 கிமீ அப்படின்னு சொன்னார் டூர் அரேஞ்ச் பண்ணியவர். சரி 8 கிமீ தானே நடந்து போயிடலாம்னு சொல்லி மனைவியையும் குழந்தையையும் ஜீப்பில் செல்லும் வயதானவர்களுடன் அனுப்பி வைத்தேன்.  இதில் ஒரு சுயநலமும் இருந்தது. எனக்கு இயற்கையாகவே போட்டோ எடுப்பதில் ஆர்வம். காடு மலைகள் என இயற்கை காட்சிகளை ரசிப்பதில் அலாதி பிரியம். அது போக பத்திரிக்கைகளில் ஏற்கனவே பணிபுரிந்திருந்த காரணத்தினால் புகைப்படம் எடுப்பது என்னோட பொழுதுபோக்காக மாறிவிட்டது. என்னுடைய மனைவிக்கு நடக்கணும் என்ற ஆசை இருந்தாலும் போலியோ பாதிப்பினால் இடது கால் சரியில்லாத காரணத்தாலும் மற்றவர்களின் எச்சரிக்கைகளாலும் நடக்க வைக்க மனது இடம் தரவில்லை.



கையில் கேமிராவுடன் நடக்க ஆரம்பித்தோம். இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள். காட்டிற்குள் நுழைந்து விட்ட பிரமை. காடு தான் அது. சாதாரணமாக விவரம் தெரியாத ஆசாமிகள் உள்ளே நுழைந்து விட்டால் வெளியேறுவது கடினம் தான். காட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி வரவேண்டியது தான். வழிகாட்டி இல்லாமல் நடக்க முடியாது. திக்குத் தெரியாத காட்டில்னு சொல்வாங்க அதை இங்கு உணரலாம். நான் சென்ற சமயம் எடுத்திருந்த சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். பார்க்கும் போதே தெரியும் இப்படி கஷ்டப்பட்டு இந்த கோவிலுக்கு போய்த்தான் ஆகணுமான்னு நினைக்கவும் தோன்றும்.







படி மாதிரி இருக்கே. ஏறிடலாம்னு ஏற ஆரம்பிச்சோம். படி சென்று கொண்டே இருக்கிறது. ரெண்டு மணி நேரம் ஏறின பிறகு சமதளமான ஒற்றையடிப்பாதை சென்றது. குறிப்பிட்ட இடம் வந்ததும் எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி இரண்டு தடவை மிகவும் சத்தமாக விசில் அடித்தான். சில நொடிகள் கழித்து டமால் என்ற வெடிச்சத்தம் கேட்டது. நான்கு பேர் வந்தனர். ஒவ்வொருவரையும் பார்க்க தெலுங்கு பட வில்லன்கள் போல இருந்தார்கள். உங்களால முடிஞ்ச உபகாரம் பண்ணுங்கன்னு வழிகாட்டி சொல்ல எங்களுக்கு பயம் வேறு. தெரியாத்தனமா இவனை கூட்டிட்டு வந்துட்டோமோ அப்படின்னு. அந்த நாலு பேரில் ஒருவன் என்னை பார்த்து நீ என்ன பெரிய போட்டோகிராபரான்னு கேட்க ஆமாம்னு சொன்னேன். என்னை போட்டோ எடு பார்ப்போம்னு சொல்ல உடனே என்னோட போலரைடு கேமிராவில் படம் எடுத்து பிரிண்ட்டை அவனிடம் கொடுக்க அந்த நால்வர் குழுவிற்கு சந்தோஷம் தாங்க முடியலை. பின்னர் எனக்கு தெரிந்த கொஞ்ச நஞ்சம் தெலுங்கில் விசாரிக்க அவர்கள் மலைஜாதியினராம். செஞ்சு இனத்தவர்கள் என்று கூறினார்கள். நரசிம்மரின் மனைவிக்கு செஞ்சுலக்ஷ்மி என்று பெயர் உண்டாம். செஞ்சுலக்ஷ்மி இவர்களின் இன தெய்வமாம். எங்க அம்மாவை பார்க்க போறீங்க. போயிட்டு சந்தோஷமா வாங்க அப்படின்னு சொல்லி பக்கத்தில் எங்கேயோ சென்று கை நிறைய கடலை மற்றும் வேறு சில விளைபொருட்களை (இலந்தைபழமும் இருந்துச்சு) கொண்டு வந்து கொடுத்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள். இவர்களுக்கு வருமானம் என்று எதுவும் கிடையாதாம். நம்மைப் போல் கோவிலுக்கு செல்பவர்கள் இவர்களுக்கு எதாவது கொடுத்தால் தான் உண்டு. எதற்காக வெடிச்சத்தம் கேட்டது என்று வழிகாட்டியிடம் கேட்டதற்கு இங்கு தினமும் ஆள்நடமாட்டம் கிடையாது. பகலிலேயே கரடி, சிறுத்தை போன்ற மிருகங்கள் நடமாடும் பகுதி. வெடிச்சத்தம் கேட்டால் மிருகங்கள் பயந்து ஓடிவிடும் என்பதால் தான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வரும் போது வழிகாட்டியின் சமிக்ஞையின் பேரில் வெடி வெடிக்கிறார்கள்.


பயணத்தை தொடர்ந்தோம். சரியாக மூன்று மணி நேர பயணத்திற்கு பின் கோவிலை அடைந்தோம். சிறிய சன்னதி தான். என்னைக் கண்டவுடன் என்னுடைய மகன் ஓவென்று கதறி அழுதான். எனக்கு புரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது நடந்தது வரும் வழியை காட்டிலும் ஜீப்பில் வரும் வழி மிகவும் மோசமாக இருந்தது என்று. சரி திரும்ப செல்லும் போது நான் ஜீப்பில் வருகிறேன்னு சொல்லி அவனை சமாதானப்படுத்தினேன்.

தொடரும்.......



No comments:

Post a Comment