Wednesday, April 21, 2021

முசிறி கோசாலை

காஞ்சி மஹாபெரியவா நமக்கு எத்தனையோ தர்மங்களை செய்ய சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தர்மங்களையும், சேவைகளையும் எந்த ஒரு பிரதிபலனும் பார்க்காமல் செய்து வருகிறார்கள். அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை எத்தனையோ பேர்களின் வாழ்க்கை முறைகளை மாற்றியிருக்கிறது. வேதபாடசாலை கைங்கர்யமாகட்டும், கோ சம்ரட்சணமாகட்டும், புராதன ஆலயங்கள் பராமரிப்பாகட்டும் இப்படி எத்தனை எத்தனையோ கைங்கர்யங்கள் பெரியவாளின் வாக்கின் படி இன்றளவும் நடந்து வருகிறது. அதில் ஒரு கைங்கர்யமான கோ சம்ரட்சணத்தை அதிலும் மிகவும் வித்தியாசமாகவும் இப்படிக்கூட பண்ணலாம் என்று தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு இன்றளவும் பண்ணிக் கொண்டு வருகிறார் முசிறியை சேர்ந்த தீனதயாளன் என்பவர்.

 

இவருடைய சேவையின் சிறப்பம்சம் என்னவெனில் அடிமாட்டிற்காக விலைக்கு விற்க இருக்கும் பசுக்களை தேடிக் கண்டுபிடித்து விலை கொடுத்து வாங்கி காபந்து பண்ணுவது. அது போக எதற்கும் பிரயோஜனமில்லை என்று ஒதுக்கித்தள்ளும் ஊனமுற்ற மாடுகளை வாங்கி வந்து பராமரிப்பது போன்ற சேவைகள் தான்.
 
இன்று வரை இவர் பெரியவாளை தரிசித்தது கிடையாது. ஆனால் அவர் சொன்ன கோ சம்ரட்சணம் என்ற வார்த்தையை விடாது பிடித்துக் கொண்டார். ஒவ்வொரு அனுஷம் அன்றும் முசிறியில் இருந்து காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவாளுடைய அதிஷ்டானத்திற்கு சென்று நமஸ்கரித்து அனுஷ பூஜையிலும் கலந்து கொண்டுவருகிறார்.
 
இவருடைய கோசாலையில் இன்றைய தினம் 40 பசுக்கள் வரை இருக்கிறது. இதற்கு ஒவ்வொருவருடைய உதவியும் தேவைப்படுகிறது. ஒரு பசுவை வைத்து பராமரிப்பதற்கே கஷ்டப்படும் இன்றைய காலகட்டத்தில் 40 பசுக்களை வைத்து பராமரிப்பது என்பது மிகவும் எளிதான காரியம் இல்லை.  இன்றுவரையிலும் மஹாபெரியவா கூறிய வார்த்தைகளை தட்டாமல் அதற்கு ஏற்ப செயல்பட்டு வரும் இவருக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமையும் கூட.
 
இவருடைய கோசாலையின் பெயர் சங்கரா கோசாலை. இவருடைய அலைபேசி எண்ணும் வங்கி கணக்கு எண்ணும், கொடுத்துள்ளேன். பெரியவா பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு இவருக்கு உதவி கோ சம்ரட்சணம் என்ற புண்ணிய காரியத்தில் பங்கு பெறலாம்.

G. Deenathayalan,

City Union Bank  

A/C N.O: 500101011361944

IFSC Code: ciub0000331

MUSIRI Branch.

அலைபேசி எண்: 78454 59147


Tuesday, April 20, 2021

ஒரு கப் காபி கொடு

 

சுஜாதாவின் க்ளைமாக்ஸ்களிலேயே எனக்கு பிடித்த க்ளைமாக்ஸ் இது தான்


ஒரு அதிகாலைப்பொழுது..!

 

கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

 

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

 

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி , "... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?"

 

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

 

மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"

 

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

 

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

 

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

 

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

 

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

 

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

 

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

 

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

 

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

 

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க

 

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

 

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

 

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.”

 

ஹஹஹா.... எத்தனை முறை இந்தக் கதையைப் படித்து சிரித்திருப்பேன் என்று எனக்கே நினைவில் இல்லை..!

 

இதை scroll செய்து கொண்டு போன அடுத்த கணமே ..

இந்த சுவாரஸ்ய புகைப் படம் என் கண்ணில் பட்டது...

அட...சுஜாதாவின் கல்யாண ஃபோட்டோ...!

 

சுஜாதாவின் மனைவி சொல்லி இருந்தார் :

“1963 ஜனவரி 28 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சத்திரத்தில் எங்க கல்யாணம் நடந்தது. கல்யாணக் கோலத்தில் நாங்க இரண்டு பேரும்.... எனக்குப் பிடிச்ச படம் இது..!”

 

சுஜாதா பற்றி அவரது மனைவி மேலும் சொல்லி இருந்தார் , இப்படி :

 

ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன்.. எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும்.. நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார்.. ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார். கொஞ்ச நேரம் கழித்துஒரு கப் காபி கொடுஎன்பார். அவ்வளவுதான்.. சண்டை முடிந்துவிடும்...”

 

ஒரு கப் காபி கொடு’...

சண்டையை முடிவுக்கு கொண்டு வர , எவ்வளவு சிம்பிளான கிளைமாக்ஸ்...!

 

சுஜாதா தனது ஒவ்வொரு கதையிலும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ,ஏதாவது ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் வைத்திருப்பார்....!

 

ஆனால் தன் மனைவியுடன் நடக்கும் சர்ச்சையில் மட்டும் , அவரது சமரச கிளைமாக்ஸ் வார்த்தை எப்போதுமே ஒரே மாதிரிதானாம்..!

 

ஒரு கப் காபி கொடு”...

 

சுஜாதாவின் கிளைமாக்ஸ்களிலேயே எனக்குப் பிடித்த கிளைமாக்ஸ் இதுதான்..!

 

திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ]



 

Wednesday, April 14, 2021

கஞ்சி குடிக்காத காமாக்ஷி! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

 காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சி ஸம்பந்தப்படுத்தி ஒரு இருசொல்லங்காரக் கவிதை இருக்கிறது.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால்: காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப் போட்டாலும் சாப்பிடமாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்’ என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்’ என்றில்லாமல் ‘அரவார்’ என்று வருகிறது. இப்படிப்பட்ட ஐந்துதலைப் பாம்புக்கு அம்பாள்) ஆறாவது தலையாக மானஸிகமாக ஆகிறாளாம்!

கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே

வெஞ்சினங்க ளொன்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்

அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே

கஞ்சமுகக் காமாட்சி காண்

கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள முகம். அம்பாள் முகம் அப்படி இருக்கிறது. கஞ்சி குடிக்காதவள், எதுவும் சாப்பிடாமல் கஞ்சத்தனமாயிருக்கிறாள் என்கிற மாதிரியும் த்வனிக்கிறது!

ஸரி, அம்பாளைப் பற்றி இப்படி ஏதோ அல்ப விஷயங்களைச் சொல்லி அப்புறம் ஆறுதலைப் பாம்பு என்று விஷமாக முடித்தால் என்ன அர்த்தம்?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும் – சிலதாவது.

‘கஞ்சி குடியாள்’ என்றால் காஞ்சீபுரத்தில் குடி கொண்டிருப்பவள் என்று அர்த்தம். ‘கம்பஞ்சோறு உண்ணாள்’ என்றால் ஏகம்பன் என்றும் கம்பன் என்றும் சொல்லப்படும் ஏகாம்ரநாதனுக்கு நைவேத்யமாகிற சோற்றை உண்ணாதவள் என்று அர்த்தம். சிவாலயங்களில் முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் பண்ணிவிட்டு அப்புறம் அதையேதான் அவன் பிரஸாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாக்ஷிக்கு முதலில் செய்துவிட்டு அப்புறந்தான் ஸுந்தரேஸ்வரர் உள்பட மற்ற எல்லோருக்கும்! காஞ்சிபுரத்திலே நூற்றெட்டு சிவலாயங்கள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது அம்பாள் ஸந்நதியில்லாமல், அந்தப் பராசக்தி எல்லா மூர்த்திகளுக்கும் மேற்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக காமாக்ஷி என்று தனிக்கோயிலில் வாஸம் செய்கிறாள். அங்கே அவளுக்கென்றே தயார் செய்கிற நைவேத்யம்தான் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏகாம்ரேச்வரர் நைவேத்யம் அவளுக்கு வருவதில்லை. இதனாலே அவள் “கம்பஞ்சோறுண்ணாளே!”

அவள் பரம ப்ரேமையே ஒரு ரூபமாக ஆனவள். நாம் பண்ணுகின்ற தப்புகளுக்கு, அபசாரங்களுக்கு நம் மேல் அவளுக்கு எத்தனையோ கோபம் கோபமாக வர வேண்டும். ஆனால் அவளுக்குக் கோபித்துக் கொள்வது என்றால் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை. ‘வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே’ என்றது இப்படி வெம்மையாக, அதாவது ரொம்ப உஷ்ணமாக, சினம் கொள்வதில் அவளுக்கு இஷ்டமே இல்லை என்று, அவளுடைய தயையை, க்ஷமையை (மன்னித்தருளும் மனப்பான்மையை) தெரிவிக்கிற வாசகமாக ஆகிறது. ‘வ்யஞ்ஜனம்’ என்பதை தமிழ்ப் பாட்டில் ‘வெஞ்சினம்’ என்று சொல்லலாம்.

அப்படிச் சொல்லும்போது, கஞ்சி காமாக்ஷிக்கு வியஞ்ஜனமில்லாமல் சுத்தான்னம் மட்டும் நிவேதிக்க வேண்டுமென்று இருக்கிற அபிப்பிராயத்தை இந்தப் பாட்டு சொல்லுவதாகவும் ஆகும். அரவார் என்றால் ஹரனான சிவனைச் சேர்ந்த அடியார் என்று அர்த்தம். சிவபெருமானுக்குத் ஐந்து முகங்கள் உண்டு. அதனால் அவர் ‘அஞ்சுதலை அரன்’ ஆகிறார். அவரை மனஸிலே வைத்து உபாஸிக்கிறவர்கள் ‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவார்’. ‘ஆறுதலையாவாள்’ என்றால் ‘ஆறுதலை அளிக்கிறவள்’, “ஆறுதலாக இருப்பவள்” என்று அர்த்தம். நெஞ்சத்தில் ஈஸ்வரனை உபாஸிக்கிறவர்களுக்கு ஸம்ஸாரக் கஷ்டம் தெரியாமல் ஆறுதலாக இருப்பவள் அம்பாள்.

‘நெஞ்சுதனில் அஞ்சுதலை அறிவார்க்கு’ என்கிற பாடத்தை வைத்துக்கொண்டால் ‘மனஸிலே பயத்தை உடையவருக்கு ‘அம்பாள் அதைப் போக்கி ஆறுதல் தருகிறாள் என்று ஆகும். “அஞ்சுதலை”- அஞ்சுதல், அச்சப்படுதல் என்பதை.



காஞ்சி மஹா பெரியவர் தமிழ் புத்தாண்டு அன்று என்னென்ன செய்வார் என்பது உங்களுக்கு தெரியுமா?

 


ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு அன்றும் காலையில், உலக மக்கள் நலமுடன் வாழவும், பரந்த மனம் பெறவும் வேண்டி ‘ஆத்ம பூஜை’ (தியானம்) செய்வார். புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாகவே காஞ்சி மடம் களை கட்ட ஆரம்பித்து விடும். மடத்தை சுத்தம் செய்து, தென்னங் குருத்து, வாழை, மா இலையால் தோரணம் கட்டச் சொல்வார் பெரியவர். புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில், பெரியவர் தினமும் பூஜிக்கும் திரிபுர சுந்தரி சந்திர மவுலீஸ்வரர் சந்நிதி- கனிகள், காய்கறி, மலர்களால் அலங்கரிக்கப்படும். இரண்டு பெரிய குத்து விளக்குகளை அங்கே வைப்பார்கள், பெரிய கண்ணாடி, சந்தனம், குங்குமம், வாசனை திரவியங்கள், பூஜை பொருட்கள் அங்கே வைக்கப்படும். ஒரு ரூபாய் நாணயங்கள் குவிக்கப்படும்.

பெரியவரைத் தரிசிக்க புத்தாண்டுக்கு முதல்நாளே பக்தர்கள் ஏராளமாக கூடியிருப்பார்கள்.


புத்தாண்டு அன்று காலையில் சந்திர மவுலீஸ்வரரைத் தரிசனம் செய்யும் பெரியவர் கண்ணாடியில் முகம் பார்ப்பார். பானகம், நீர் மோர், வடைப்பருப்பு நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு வழங்க உத்தரவிடுவார். சங்கீத வித்வான்கள் அன்றைய தினம் பாடுவார்கள். அதை ரசித்துக் கேட்பார். தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம், நாராயண ஸ்ம்ருதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடக்கும். பாராயணம் முடிவதற்குள் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று திரும்புவார்.


பின், பெரியவர் முன்னிலையில் மடத்து வேதியர்களால் அந்த ஆண்டுக்குரிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும். பஞ்சாங்கம் கேட்பதின் பலன் பற்றி முன்கூட்டியே பக்தர்களுக்கு பெரியவர் விளக்கமளிப்பார். நட்சத்திரம், திதி, வாரம், யோகம் ஆகியவை பற்றி கேட்பதால் பாவ நிவர்த்தி, ஆயுள்விருத்தி, லட்சுமி கடாட்சம், செயல்பாடுகளில் வெற்றி, நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்பார்.


இதையடைத்து சந்திரமவுலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும். அப்போது புளி, வெல்லம், வேப்பிலை கொழுந்து சேர்த்து கலந்த பச்சடி நைவேத்யம் செய்யப்படும். இதற்கு ‘நிம்பகந்தளம்’ என்று பெயர். மனிதவாழ்வில் இனிப்பு, புளிப்பு, காப்பான சம்பவங்கள் நிகழும். இவற்றை அனுசரித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த பிரசாதம் எல்லாருக்கும் வழங்கப்படும் என அவர் சொல்வார்.


புத்தாண்டன்று பெற்றோர், குரு, தெய்வத்தை வணங்குமாறும், ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (உலகம் நன்றாக இருக்கட்டும்) என்றும் கூறி பக்தர்களுக்கு தனித்தனியாக ஆசி வழங்குவார். அப்போது காமாட்சி, ஆதிசங்கரர், ஸ்ரீபாலா படங்களையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வழங்குவார். அந்நாளில் அவர் சிறிது கூட ஓய்வின்றி, மாலை வரை பக்தர்களுக்கு ஆசியளிப்பார். பிக்ஷைக்கு கூட போக மாட்டார்.  இடையிடையே சிறிது பருப்பு, பானகம் மட்டும் அந்த இடத்தில் இருந்தே எடுத்துக் கொள்வார். பக்தர்களை அன்று நடக்கும் ‘சந்தர்ப்பனை’ யில் (அன்னதானம்) சாப்பிட்டுச் செல்லுமாறு கூறுவார்.


தரிசனத்திற்கு வரும் குழந்தைகள் மீது பெரியவருக்கு உயிர். அவர்களைப் பாடச்சொல்லி, தானும் சேர்ந்து பாடுவார். அந்த பாட்டிலுள்ள கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி தானும் குழந்தையாகவே மாறிவிடுவார். அவர்களுக்கு சிரவணன்  தன் பெற்றோரை சுமந்து சென்றது (ராமாயண சம்பவம்) உள்ளிட்ட கதைகளை கூறி பெற்றோருக்கு பணிந்து நடக்க அறிவுரை சொல்வார்.


மஹா பெரியவர் இன்றும் அந்தர்யாமியாய் (மறைவாய்) இருந்து நமக்கு புத்தாண்டு ஆசிகளை அள்ளித்தருகிறார். அவரையும் நமது காஞ்சி ஆச்சார்யர்களையும் புத்தாண்டன்று மறக்காமல் வணங்குவோமா!




Tuesday, April 13, 2021

மஹாபெரியவா

 சந்திரசேகரேந்திர சுவாமிகளுக்கு வித்தியாப்பியாசம் ஆரம்பமானது. காமகோடி பீடத்தை, ‘ஸர்வக்ஞ பீடம்’ என்பார்கள். அதாவது நாலும் கற்றுத் தெளிந்தவர் அமரும் பீடம் என்று பொருள். ஐந்து ஆண்டுகள் வேத, வேதாந்தம் முதல் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றறிந்தார் இளம் சுவாமிகள். திருச்சிக்கு அருகிலுள்ள மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் இவருக்குப் ‘படிப்பு’ தொடர்ந்தது...


மகேந்திரமங்கலத்துக்குள் நாம் நுழைவதற்கு முன் கல்வி பற்றியும் அதன் பயன்பாடு குறித்தும் மகா பெரியவா அருளிய உபதேச சாரத்தைக் கொஞ்சம் சுவைப்பது பொருத்தமாக இருக்கும்.

‘உள்ளத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதி நிலவுகிறதோ அந்த அளவுக்கு இன்பம் மேலிடுகிறது. அமைதி குறையக் குறைய துன்பம் வளரும். மனிதர்கள் தங்களின் துன்பங்கள் நீங்குவதற்கு முயற்சி செய்யும்போது, பிறரைத் துன்புறுத்தவும் நேரிடுகிறது. இதனால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது.

இதை அடக்கி அமைதியையும் சமாதானத்தையும் நிலைநிறுத்த வேண்டு மானால், அதற்கு உண்மையான பரிகாரம், புலன்களைப் பறிக்கும் வெளி விஷயங்களிலிருந்து தங்கள் மனதைத் திருப்பி அதைத் தங்கள் வசமாக்கி அமைதியாக இருக்க முற்பட வேண்டும். அப்போதுதான் துன்பம் அணுகாமல் இருக்கும். அவர்களால் பிறருக்குத் துன்பம் விளையாமலும் இருக்கும். நல்ல கல்வியைப் பயிலும் பயனாகத்தான் இத்தகைய வெளி அமைதியும் உள் அமைதியும் நம் நாட்டில் காலம் காலமாகச் சித்தித்து வந்திருக்கின்றன.



புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை. ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல், புலன்கள் போன வழியே அவற்றைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந் தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும்கூட கெட்ட எண்ணங்களும் துராசைகளும்தான் வளரும்; துன்பங்கள் பெருகும்.

ஆஸ்திகமயமான கல்வி போதனையுடன், அந்நிய நாட்டாரின் முறைகளைக் கலந்து போதிப்பதில் நாம் மிகவும் ஜாக்கிரதையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆத்ம சுத்தி, அந்தரங்க சுத்தி, ஒழுக்கம் ஆகியவற்றைக் கல்வியின் உருபயனாகக் கருதவேண்டும்.

நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையிலான எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேல்நாட்டாரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவற்றில் ஈடுபட்டு அவற்றைக் கையாளுவோமானால், படிப்படியாக நம் பண்பாடு, அறம் ஆகியவற்றிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்து கொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்தப் பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்திவிடுவோம்.

தற்போது நம் மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே நம் தேசத்துக்கு உரிய ஒழுக்கம். பண்பாடு, இறை வணக்கம், ஆத்ம தியானம் இவ்விதமான பழக்கங்களே இல்லாமலிருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி வாழ்க்கை முறையிலும் வெளிநாட்டவரின் முறைகளையே பின்பற்றி வருகின்றனர்.

கல்வியின் முதல் பிரயோஜனமாக விநயம் ஏற்படவேண்டும். பழைய நாளில் மாணவனுக்கு ‘விநேயன்’ என்றே பெயர் இருந்தது. அடக்கம் இல்லாத படிப்பு படிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக்கொள்ளும் படியான நல்ல குணம் முதலில் வர வேண்டும். இப்போது நாட்டில் முன்னைவிட நிறைய படிப்பு இருக்கிறது. ஹைஸ்கூலில் இடம் இல்லாமல், ‘ஷிப்டு’ வைத்து வகுப்பு நடத்துகிறார்கள். எனினும், படிப்பின் பிரயோஜமான விநயம் ஏற்படவில்லை. அதற்கு நேர் விரோதமான குணம்தான் வளர்கிறது. படிக்கிற பையன்கள் இருக்கிற இடத்துக்குத்தான் போலீஸ், ராணுவம் எல்லாம் அடிக்கடி வர வேண்டியிருக்கிறது.



நம் தேசப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். பெண்களுக்கு, சுவபாவமான அடக்க குணத்தோடு கல்வியின் பிரயோஜனமாகப் பின்னும் அதிக அடக்கம் வளரவேண்டும்.

‘படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? சிஷ்யர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?’ என்பனவற்றை எல்லாம் விளக்கிச் சொல்கிற நீதி நூல்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒரு நீதியாக ‘இளமையில் கல்!’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு குருவினிடத்தில் போய்ப் படிக்கவேண்டும் என்பது சாஸ்திரம். சிஷ்யன் பிக்ஷை எடுத்து வந்து குருவுக்குத் தருவான். பிக்ஷை எடுப்பதால், அவனுக்கு அகங்காரம் கரைந்து விநயம் ஏற்பட்டது. ஆசிரியருடனேயே வசித்ததால் அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் பிரியம் இருந்தது.சிஷ்யர்களைக் கூடவே வைத்துக் கொண்டிருந்த குரு, அவர்களது மரியாதையைப் பெறுகிற விதத்தில், நல்ல ஒழுக்கங்களுடனேயே வாழ வேண்டியதாயிற்று. இயல்பாகவே மாண வனுக்குப் பக்தி உண்டாயிற்று.

முன்பு மாணவர்களுக்கு இருந்த குரு பக்தி என்பதே இப்போது அடியோடு போய் விட்டது. பையன் வாத்தியாரைப் பார்த்து, ‘கேள்வித் தாளைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அடிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது! முன்பு இருந்த பாடங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் முறை மாறிவிட்டது. மருந்து ஒன்றாகவே இருந்தாலும், பத்தியம் மாறி விட்டால் மருந்தே விஷமாகிவிடும் என்பது போல் ஆகிவிட்டது. குருபக்தி போனதும் பத்தியம் போய்விட்டது.’

மீண்டும் மகேந்திரமங்கலம் செல்வோம்.

பதினைந்து வயது டீன் ஏஜராக ‘மேல் படிப்பு’க்காக மகேந்திரமங்கலம் வந்தார் பெரியவா. கும்பகோணம் மடத்திலேயே தங்கிப் படிப்பதில் சில தொந்தரவுகள் இருந்ததால், சுவாமிகளை மகேந்திரமங்கலம் அழைத்து வந்து தங்கவைத்தார்கள். அந்தக் காலத்தில், பெரிய மேதைகள் மற்ற இடங்களிலிருந்து கும்ப கோணத்திலும், மகேந்திரமங்கலத்திலும் வந்து தங்கியிருந்து, அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

ரம்மியமான சூழல். சூரியன் உதயமாகும் விடியற்காலை வேளையில் இயற்கைக் காற்று தென்றலாக வீசிக்கொண்டிருக்கும். பட்சிகள் ரீங்கரித்துக்கொண்டிருக்கும். பின்னால் இருந்த தோட்டத்தில் கொட்டகை அமைத்து, அதில் காவேரி மணலைப் பரப்பிய இடத்தில் ‘வகுப்பு’ நடக்கும். சொல்லிக் கொடுக்க வரும் குரு, சீடரான சுவாமிகளை நமஸ்கரித்து விட்டுத்தான் பாடம் தொடங்குவார். ஜகத்குருவுக்கு மரியாதை.

அன்று வகுப்பு ஆரம்பமாகிவிட்டது. தலை குனிந்து மணலை அளைந்து கொண்டே இருந்தார் சீடரான சந்திரசேகேந்திர சுவாமிகள். அதைக் கவனித்துவிட்ட குரு, எதுவும் சொல் லாமல் எடுத்துக்கொண்டிருந்த பாடத்தைத் தொடர்ந்தார். வகுப்பும் முடிந்தது.

மறுநாள் வகுப்பு தொடங்கியது. முதல் நாள் மாதிரியே மணலை அளைந்து விளையாடிய படியே உட்கார்ந்திருந்தார் சுவாமிகள். ஆசான் பாடத்தை நிறுத்தினார். முகம் லேசாகச் சிவக்க, எழுந்து நின்றார். மாணவரும் எழுந்து நின்றார்.



“நான் இப்பவே ஊருக்குப் போறேன்!” என்றார். சீடருக்கு எதுவும் புரியவில்லை.

“பாடம் நடந்துகொண்டிருக்கிறதே...” என்றார் சன்னமானக் குரலில். ‘என்னப் பிரச்னை’ என்று அவரால் கேட்க முடியவில்லை. குருவே விளக்கினார்.

“இப்போது படிப்பது சாதாரண படிப்பு என்று நினைத்துவிடக் கூடாது. புத்தி முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டிய படிப்பு. கவனம் எங்கேயும் திசை திரும்பக்கூடாது...” என்றார், சற்றே கண்டிப்பான குரலில்.

மாணவர், மணலை அளைந்தபடி இருந்தது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. பொறுக்கவும் முடியவில்லை. ஆனால் கற்பவர் ஜகத்குரு என்ப தால் கண்டிக் கவும் இயலவில்லை. அதேநேரம், ‘பாடம் கேட்கப் பிடிக்காதவருக்காக நான் ஏன் சிரமப் பட்டு ஊர் விட்டு ஊர் வந்து, என் நேரத்தை விரயம் பண்ண வேண்டும்?’ என்று மனதுக்குள் உறுமியிருப்பாரோ!

பெரியவா அடக்கமாகவும் விநயத்துடனும் பேசினார். “கோபித்துக் கொள்ளக்கூடாது. நேற்றும் இன்றும் நான் மணலில் விளையாடிக் கொண்டிருந்தது உண்மைதான். இருந்தாலும் எனது முழுக் கவனமும் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடத்தில்தான் இருந்தது.”

குருவுக்கோ கோபம் குறையவில்லை. இதை எப்படி நம்புவது என்பதும் புரியவில்லை. ஆசிரியரின் இந்த மனநிலை மாணவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

“நான் சொன்னதில் நம்பிக்கையில்லை என்றால் தாங்கள் சோதித்துப் பார்க்கலாமே” என்றார். குருவுக்கும் அது சரி என்றே பட்டது. முன் தினம் நடந்த பாடத்திலிருந்து கடினமான சில கேள்விகளை எழுப்பினார். ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே மாணவரிடமிருந்து பளீரென்று பதில் வந்து விழுந்தது. மட்டுமல்லாமல், முன்னால் நடந்த சம்பவங்களையும் பின்னால் வரவிருக்கும் நிகழ்வு களையும் தீர்மானமாகச் சொன்னார். குரு ஸ்தம்பித்துப் போனார். “மன்னிக்கணும்...” என்று மனமுருகி கண்ணீர் விட்டார். சாஷ்டாங்கமாக சுவாமிகளின் காலில் விழுந்து நமஸ்கரித்தார். “எனக்கு உத்தரவு தரணும்... நான் ஊருக்குப் போகிறேன்...” என்றார்.

சுவாமிகளுக்குப் புதிராக இருந்தது. முதலில் படிப்பில் நான் கவனம் செலுத்தவில்லை என்று கோபித்துக்கொண்டு புறப்பட்டது நியாயம். இப்போது நான் எல்லாம் சரியாகச் சொல்லியும் கோபம் தணியவில்லையே!

“மன்னிக்கணும்... நான் சரியாக பதில் சொல்லிவிட்டேன் போலிருக்கே...” என்றார் தயங்கியபடி.

“அதில் என்ன சந்தேகம்? நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் மிக அருமையாக பதில் சொன்னீர்கள். உங்களிடமிருந்து நான்தான் நிறைய தெரிந்துகொள்ளணும். இனி, எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை. உத்தரவு கொடுங்கள்... நான் கிளம்புகிறேன்” என்றார் குரு.

சில்லென்று குளிர்காற்று வீசி வெப்பத்தைத் தணித்தது!


அம்பாளின் மகிமை



உலகனைத்துக்கும் தாயாக இருப்பவள் ஸ்ரீகாமாக்ஷி, அவளுடைய குழந்தைகள்தாம் மக்கள் அனைவரும். குழைந்தைகளாகிய நாம் அறியாமையால் மற்றத் தேவர்களை வழிபட்டாலும் கூட நாம் அவர்களுக்குச் சொந்தமானவர்களாக ஆக முடியுமா? ஒரு குழந்தை அல்லது பசு மற்றவர் வீட்டில் நுழைந்து விட்டதால் அது அவர்களுடையதாகவோ, அரசுடைமையுடையதாகவோ ஆகுமா? அது தன் தாயைத்தானே சேரும். இதுபோல நாம் எந்த நிலையிலும் ஸ்ரீகாமக்ஷியின் குழந்தைகள்தாம் என்று அம்பாளின் பெருமையை ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர் இவ்விதம் இந்த ச்லோகத்தில் கூறுகிறார்.

மௌட்யாதஹம் சரணயாமி ஸுராந்தரம் சேத்
கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய பவாமி மாத : |
அக்ஞானத : பரக்ருஹம் ப்ரவிசந் பரஸ்ய
ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பசு: கிமு ராஜகீய : ||

ஸ்ரீலலிதா பரமேச்வரியாக விளங்கும் இவளது கருணை ஏற்பட்டு விட்டால் நமக்கு எல்லாவிதமான ஸௌக்யங்களும் கிட்டும். அந்த நற்பயனைப் பற்றி வர்ணிக்கவே முடியாது. எந்தவிதமான ஸாதனங்களும் இல்லாமலேயே உலகை வென்றுவிட முடியும். இதற்கு உதாரணம் மன்மதன். இவனுக்கு உடலே கிடையாது. இவனது வில் பூவால் ஆனது. வண்டுகள்தான் நாண்கயிறு. பானங்கள் மொத்தம் ஐந்துதான். படைபலம் கிடையாது. வஸந்தகாலம் ஒன்றுதான் துணைவன். மலயமலையின் காற்று இவனது தேர். இவ்வாறு இருப்பினும் இந்த மன்மதன் உலகனைத்திலும் வெற்றி கொள்கிறான். பரமசிவனையும் மயக்குகிறான். இதற்குக் காரணம் அம்பாளின் கடைக்கண் அருள்தான் என்று ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் கூறுகிறார்.

தனு: பௌஷ்பம் மௌர்வி மதுகரமயீ பஞ்ச விசிகா :
வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோதனரத : |
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே ||

பரமேச்வரரின் பெருமையும், சிரஜீவித் தன்மையும் கூட அம்பாளின் ஸௌபாக்யத்தினால்தான் ஏற்படுகிறது. தேவர்கள் அமிருதத்தை அருந்தியும் கூட விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் மிகவும் கொடிய விஷமாகிய ஹாலாஹலத்தைப் பருகிக்கூட நீலகண்டரான சிவனுக்குக் காலம் முடிந்தது என்ற பேச்சே இல்லை. இதுவும் அம்பாளின் தாடங்கத்தின் மகிமைதான் என்று ஸௌந்தர்யலஹரி கூறுகிறது.

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யுஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத : |
கராளம் யத் க்ஷ்வேளம் கபளிதவத: காலகலனா
ந சம்போஸ்தன்மன்யே தவ ஜநநி தாடங்கமஹிமா ||

அம்பாள் இவ்வாறு தன் பதிக்குப் பெருமையை வாங்கித்தந்தாலும் கூட அந்தச் சிறப்பு தனக்கே வேண்டும் என்று எண்ணுவதுமில்லை. பெருமையால் வரும் பட்டத்தை சிவனுக்கே சூட்டினாலும் பேசாமல் இருக்கிறாள். மன்மதனை இரண்டு பேருக்கும் பொதுவான (அர்த்தநாரீச்வரரின் நெற்றிக் கண்ணில் அம்பாளுக்கும் பாதி உரிமை உண்டானதால்) நெற்றிக்கண்தானே எரித்தது? சிவன் தான் மட்டுமே “ஸ்மரரிபு:" என்று பெயர் பெறுவது எப்படி ஸரியாகும்? இதுவாவது போகட்டும்! இடது கால் தானே உதைத்து யமனை ஜயித்தது? அதில் அம்பாளுக்குத் தானே முழுபங்கும் உள்ளது. இதிலும் புகழை ஈச்வரன் அடைவது பொருந்தவே பொருந்தாது. அதில் அவருக்கு என்ன பங்கு உள்ளது? என்று வேடிக்கையாக அம்பாளின் பாதிவ்ரத்யத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்:

ஸாதாரணே ஸ்மரஜயே நிடிலாக்ஷிஸாத்யே
பாகீ சிவோ பஜது நாம யச: ஸமக்ரம்|
வாமாங்க்ரி மாத்ரகலிதே ஜனனி த்வதீயே
கா வா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: ||

கஷ்டகாலங்களில் ஜகன்மாதாவான அம்பாளைத்தான் நாம் பிரார்த்திக்க வேண்டும். கஷ்டகாலத்திலும் தாய்தான் அழைத்தவுடனே கருணை புரிவாள். நல்ல காலத்தில் நினைக்காமல் கஷ்டத்தில் மட்டும் அழைத்தால் மற்றோர் வஞ்சனையாக எண்ணி விடுவர். தாய் அவ்வாறு இல்லாமல் கருணை புரிவாள் என்கிறார் ஒரு பக்தர்:

ஆபத்ஸூமக்ன: ஸ்மரணம் த்வதீயம் கரோமி துர்கே கருணாணவேசி |
நைதச்சடத்வம் மம பாவயேதா: க்ஷுதாத்ருஷார்த்தா: ஜனனீம் ஸ்மரந்தி||

thanks to sri வேதபாஷ்யரத்னம் ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி Kamakoti.org




Monday, April 12, 2021

கால பைரவாஷ்டகம்

 




தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலயஜ்ஞஸ த்ரமிந்து சேகரம் க்ருபாகரம்

நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே

 

பொருள்

இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

பானுகோடி பாஸ்வரம் பாவாப்திதாரகம் பரம்

நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்

கால காலமம்புஜாக்ஷ மஸ்த சூன்ய மக்ஷரம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.

 

பொருள்

கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல் வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரை மலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்

 

 

சூலடங்கபாச தண்ட பாணிமாதி காரணம்

ச்யாமகாய மாதிதேவமக்ஷரம் நிராமயம்

பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்

காசிகா புராதிநாத கால பைரவம் பஜே.

 

பொருள்

சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விரக்ரஹம்

நிக்வணன் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே

 

பொருள்

போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்க நாசகம்

கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்

ஸ்வர்ணவர்ணகேசபாச சோபிதாங்கநிர்மலம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.

 

பொருள்

தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்

நித்ய மத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம் 

ம்ருத்யுதர்பநாசனம் கரால தம்ஷ்ட்ரபூஷணம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.

 

பொருள்

ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

அட்டஹாஸபின்ன பத்மஜாண்ட கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜாலமுக்ரசாஸனம் 

அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.

 

பொருள்

அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

பூதஸங்கநாயகம் விசால கீர்த்திதாயகம்

காசிவாஸிலோக புண்யபாப சோதகம் விபும் 

நீதிமார்ககோவிதம் புராதநம் ஜகத்பதிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.

 

பொருள்

பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

 

 

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

ஜ்யானமுக்திஸாதகம் விசித்ரபுண்யவர்த்தனம் 

சோகமோஹ லோபதைன்யகோப தாப நாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்ந்திம்த்ருவம்.

 

பொருள்

மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.

 

(இதி ஸ்ரீமத் சங்கராசார்ய - விரசிதம் கால பைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்)