Thursday, May 27, 2021

சொல்லணும்னு தோணிற்று



பொதுவா ஒவ்வொருவருடைய மனதிற்குள்ளும் சோகம் என்பது இல்லாமல் இருக்காது. அந்த சமயம் சிலர் அழுவார்கள். சிலர் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாமல் யாரிடமாவது வம்பு இழுப்பார்கள். சிலர் வேற சில பழக்கங்களுக்கு சென்று விடுவார்கள். ஒரு சிலர் தனக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டு அமைதியடைவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில் நானும் ஒருவன்னு சொல்லிக்கலாம்.



எனக்கும் நிறைய சோகங்கள், கோபங்கள் வருவதுண்டு. சில சமயம் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் நிறைய வார்த்தைகள் விடுவதுண்டு. அதை நினைத்து பின்னால் சில சமயம் வருத்தப்படுவதும் உண்டு. அதனால் சில நல்ல நட்புகளை இழந்ததும் உண்டு. என்னுடைய கோபத்தால் நட்பாக இருந்தவர்களின் போலி முகங்களும் தெரிந்தது உண்டு.



என்னுடைய அம்மாவின் கடைசி காலத்தில் நான் அருகில் இல்லை என்ற சோகம் எப்போதும் எனக்கு உண்டு. அம்மாவுடன் கடைசியாக எப்போ பேசினேன் என்பதும் அம்மாவை கடைசியாக எப்போ பார்த்தேன் என்பதும் எனக்கு இன்னும் சரியாக நினைவில்லை. அதை நினைக்கும் போது எனக்கு அம்பாளின் மீது பல சமயம் கோபம் வரும். அம்பாள் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம். நம்மோட கர்மாவை நாம் அனுபவித்தே ஆகணும்.



பெரியவா அம்பாளை பற்றி சொல்லும் போது // அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள் தான்// என்று கூறியிருக்கிறார். அதை நினைத்து பார்த்து அமைதியாகி விடுவேன். அது மாதிரி சமயத்தில் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றான இந்த பாட்டை மிகவும் சத்தமாக ஒலிக்க செய்து கேட்டுக் கொண்டே இருப்பேன்.




ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி அப்படின்னு ப்ரியா சகோதரிகளின் குரலில் இந்த பாட்டை கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது ரெண்டு பேர் தான். முதலில் சோளிங்கர் அமிர்தபலவள்ளித் தாயாரும் அடுத்து லோகத்துக்கே ஜனனியாக இருக்கும் காஞ்சி காமாக்ஷியும் தான்.



அம்பாளின் பல ரூபங்கள் அப்படின்னு பெரியவா சொல்லியிருக்கார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் அம்பாளை நமஸ்காரம் பண்றது பிடிக்கும். எனக்கு அமிர்தபலவள்ளி தாயார், காமாக்ஷி ஸ்வரூபம் தான் ரொம்ப பிடிக்கும்.



பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலகம் முழுவதும் என் அகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி




காஞ்சி காமேஸ்வரியோ இல்லை காஞ்சி காமாட்சியோ அவளோட சன்னதிக்கு முன்னாடி நின்று ஒரு நிமிடம் அந்த புன்னகை நிறைந்த காமாக்ஷியை பார்க்கும் போது மனதிற்குள் சொல்லத் தெரியாத அழுகை வரும் பாருங்க அப்படியே நாம குழந்தையா மாறிடுவோம். எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கான்னு அவ கிட்டே அப்படியே ஐக்கியமாகிடணும்.



அதே மாதிரி // உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிட கூட்டி வைத்தாய்
நிழலென தொடர்ந்த முன்நூழ் கொடுமையை நீங்க செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி//




எப்படியோ சென்று கொண்டிருந்த என்னோட வாழ்க்கையை நீ இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு மாற்றினது அம்பாள் தான். பத்திரிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அப்போது 22 வயது தான். மறந்தும் கோவில் பக்கம் செல்லாமல் சினிமா ஷுட்டிங், நடிகையர் பேட்டி, நடுப்பக்க போட்டோன்னு எடுத்து கொண்டு சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்து யாரைப் பார்த்தாலும் காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வைச்சிருக்கா அப்படிங்கற ரேஞ்சில் தான் பேட்டி எடுக்க வேண்டியதா இருந்து ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்து போய் மெதுவாக ஆன்மீகம் பக்கம் வர ஆரம்பித்தேன்.



துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டே‌ஸ்வரி




சோளிங்கர் நரஸிம்மரை விட்டால் வேறு தெய்வம் கிடையாது என்று முரட்டு பக்தி எனக்கு இருந்த காலம் வந்தது. என்னமோ தெரியலை அங்க போனா எதோ ஒரு சொல்லத் தெரியாத தைரியம் வரும். சின்ன பசங்க லீவுக்கு தன்னோட தாத்தா பாட்டி வீட்டுக்கு போனா எவ்வள்வு சந்தோஷமா இருப்பாங்களோ அப்படி இருக்கும் எனக்கு சோளிங்கர் போனா. 1305 படி ஏறி நரஸிம்மரை பார்க்கிறதுக்கு முன்னாடி அங்க பத்மாஸத்தில் உட்கார்ந்திருக்கிற அமிர்தபலவள்ளியை பார்த்த உடனே அடிவயிற்றில் இருந்து ஒரு கேவல் அழுகையா வரும். அம்மாவை ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கிற குழந்தையோட நிலைமையில் தான் நான் இருப்பேன். கடைசி தடவையா அங்க வந்ததில் இருந்து இன்னிக்கு வரைக்கும் நடந்த விஷயத்தை அங்க அவ சன்னதியில் வாய் விட்டு சொல்லி இனி நீ பார்த்துக்கோ அப்படின்னு சொல்லிட்டு வந்துடுவேன். பக்கத்திலேயே ஒருத்தர் உட்கார்ந்திருப்பார் யோகத்தில். அவரை ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிட்டு வந்துடுவேன். அவரைப் பற்றி எழுதணும்னா பக்கம் பக்கமா எழுதலாம். இன்னிக்கும் அவரை எங்க வீட்டில் தாத்தான்னு தான் சொல்வோம்.

// தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்//
/நம்மோட பிறப்பு தரித்திரமா இருந்தாலும் நம்மோட இறப்புசரித்திரமா இருக்கணும்னு சிலர் சொல்வாங்க. என்னை பொறுத்தவரை தரித்திரமா இருக்கோ சரித்திரமோ இருக்கோ அது எனக்கு தேவையில்லை. என்னால சில நல்ல காரியங்கள் நடந்திருக்கு. நடந்து கொண்டு இருக்கு. இன்னும் நடக்கும். இப்போ சமீபமா சில சிவன் ஆலயங்களுக்கு விளக்கேற்ற எண்ணெய் அனுப்பும் பிராப்தம் கிடைத்திருக்கிறது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த நல்ல காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். இது பெரியவாளுடைய வார்த்தை. அவர் சொன்னதை சிரமேற்கொண்டு செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

 என்னை பொறுத்தவரைக்கும் அம்பாள் பெரியவாள் கிட்டே சொன்ன விஷயங்களை பெரியவா நம்ம கிட்டே சொல்லியிருக்கார். நாம பண்ணனும் அவ்வளவு தான். அதை பண்றதுக்கு உண்டான பலத்தையும் நமக்கு அம்பாள் தான் கொடுக்கணும்னு பிரார்த்தனை பண்ணுவோம்.




Tuesday, May 25, 2021

குரு உபதேசம் ராமர்

 

கர்ண பரம்பரைக் கதைகளைப் பற்றி, மூல நுால்களில் தேடினால் கிடைக்காது. அதற்காக, அவற்றை ஒதுக்கி விடக் கூடாது; காரணம், அவை எல்லாம் கருத்துப் புதையல்கள். அத்தகைய, ஸ்ரீராமர் - ஆஞ்சநேயரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை இது:


ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; வெளியிடாதே...' என்று கூறினார்.


மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து, 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே...' என்றார்.


அமைதியாக ஸ்ரீராமரை நமஸ்கரித்து, 'தெய்வமே... அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன்; தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால், அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து, தாங்களே விசாரிக்கலாம்...' என்றார், ஆஞ்சநேயர்.


உடனே, சிலரை வரவழைத்து, 'ஆஞ்சநேயன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?' எனக் கேட்டார், ஸ்ரீராமர்.


கேள்வி ஒன்றுதான்; ஆனால், பதில்கள் தான் பலவிதமாக வந்தன...


'
புரியவில்லை...' என்றனர். சிலர், 'மாருதி, ஏதோ மனம்போன போக்கில் உளறிக்கொண்டு போனான்...' என்றனர், மற்றும் சிலர்.


இன்னும் சிலரோ, 'அனுமன் பேசியது புரியாவிட்டாலும், நகைச்சுவையாக இருந்தது...' என்றனர்.


இவ்வாறு பலரும் பலவிதமாக கூற, பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும், 'ஸ்ரீராமச்சந்திர பிரபுவே... அனுமன் உபதேசித்தது, சாதாரண மந்திரமா... பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே...' என்று சொல்லி, மெய் சிலிர்த்தனர்.


விதை ஒன்று தான்; நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட, அவ்வப்போது நீர், உரம் இட்டு, பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல, குரு உபதேசிக்கும் மந்திரத்தை, எல்லாரும் பெற்றுக்கொண்டாலும், அது, பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.


குரு பக்தியும், குரு உபதேசித்த மந்திரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் சேர்வதாலேயே, சித்தியாகிறது. ஆகையால், யாரிடம், எவ்வளவு பேரிடம் மந்திர உபதேசம் பெற்றோம் என்பதை விட, பெற்ற மந்திரத்தை, அதற்குண்டான முறைப்படி உச்சரித்து வந்தால், மந்திரத்தின் சக்தி அதிகரிக்கும். தெய்வத்தை எண்ணி பாராயணம் செய்யும்போதும், இந்த நியதி நிறைவேற்றப்பட்டால், வாழ்வில் என்றும் குறையேதும் இருக்காது!