Tuesday, May 25, 2021

நரஸிம்ம ஜெயந்தி

 

இன்னிக்கு நரஸிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஏகப்பட்ட பதிவுகள் முகனூலிலும், வாட்ஸ் அப்பிலும் வதந்தியை விட வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. அதே போல் திடீர் நரஸிம்ம உபாஸகர்களும் இன்னிக்கு புதுசா அவதாரம் எடுத்திருக்காங்க. இதுல ஒருத்தர் நரஸிம்மர் தான் ஜாம்பவான் அப்படின்னு புதுசா ஒரு பீதியை வேற கிளப்பி விட்டிருக்கார். உங்களை சொல்லி தப்பில்லை. வெறும் பொதிகை சேனல் மட்டும் இருந்த காலத்தில் வயலும் வாழ்வும், மனைமாட்சின்னு பார்த்துகிட்ட இருந்த நிலைமை மாறி இப்போ கம்ப்யூட்டர், மொபைல், வாட்ஸ் அப் அப்படின்னு வசதி வந்த உடனே முகனூலில் கிடைக்கும் அல்ப லைக், கமெண்ட்களுக்கு ஆசைப்பட்டு திடீர் பேச்சாளர்களாகவும், திடீர் உபதேசம் பண்ணுபவர்களாகவும், திடீர் சொற்பொழிவாளர்களாகவும் மாறிக்கொண்டு இருக்கிறாங்க.


சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார் போன்ற உபன்யாச சக்ரவர்த்திகள் இருந்த காலம் இப்போது இல்லை. ஒரு உபன்யாஸகர் வெறும் உபன்யாஸம் மட்டும் பண்ணாமல், உபன்யாஸம் பண்ணும் போது வேதத்தில் இருந்து சில வரிகளை சொல்லி அதற்கு அர்த்தமும் சொல்வார்கள். ஆனால் இப்போ அப்படி இல்லை. துஷ்யந்த் ஸ்ரீதர், சுதா க்ஷேசையன் போன்றவர்களின் சொற்பொழிவுகள் கொஞ்சம் பரவாயில்லைன்னே தோணுது.


நரஸிம்மர்னு சொன்னா சிங்கம் உருவம் எடுத்து உக்கரமா அவதாரம் எடுத்து வயித்தை கிழிச்சுட்டு ரத்தம் குடிக்கிற அவதாரம் அப்படின்னு நினைச்சா அது தப்பு. ஹிரண்யகசிபுவிற்கு பிரம்மா கொடுத்த வரத்தால் மகாவிஷ்ணு யோசிச்சு யோசிச்சு எடுத்த அவதாரம் அது.


சாகாவரம் வேண்டும் என்று கேட்டவனுக்கு அது எனக்கு கொடுக்கும் சக்தியில்லைன்னு சொல்லி பிரம்மா கிளம்பி போக வேண்டியது தானே. அதை விட்டுட்டு அடுத்த ஆப்ஷன் கேளுன்னு சொன்ன உடனே ஹிரண்யகசிபு யோசிச்சான். இப்படி ஒரு கொக்கியை போட்டு வரம் கேட்டுட்டான்.


அவன் கேட்டது மனிதனால் சாகக் கூடாது. தேவர்களால் சாகக் கூடாது. மிருகங்கள், பறவைகளால் சாகக் கூடாது. பூமிக்குள்ளேயும் சாகக்கூடாது, ஆகாயத்திலும் சாகக்கூடாது வெளியே சாகக்கூடாது. ராத்திரியும் கூடாது, பகலும் கூடாது, ஆயுதமும் கூடாது, நெருப்பு, நீர், நிலம், காற்று இப்படி எதிலும் சாவு வரக்கூடாது, இப்படி எல்லா கூடாதுகளையும் சேர்த்து கேட்ட உடனே பிரம்மாவும் எதையும் யோசிக்கலை. இவன் இவ்வளவு கஷ்டப்பட்டு தவம் பண்ணியிருக்கானே இவனுக்கு நாம கொடுத்து தான் ஆகணும்னு நினைச்சு ததாஸ்து அப்படியே ஆகட்டும்னு சொல்லி அடுத்த வேலையை பார்க்க போயிட்டார். ஹிரண்ய கசிபுவும் தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டான்.

அப்புறம் நடந்த கதை தான் நமக்கு தெரியுமே. பிரகலாதனை போட்டு படாத பாடு படுத்தி எடுத்தான் ஹிரண்யகசிபு. கடைசியில் அவனோட கதையை முடிக்க வேண்டிய நேரம் வந்த உடன் தான் மகாவிஷ்ணு அந்த அவதாரம் எடுக்க வேண்டியதாகி விட்டது. இதர அவதாரங்கள் எல்லாம் ஏற்கனவே யோசிச்சு வரமா சிலருக்கு கொடுத்து எடுக்கப்பட்ட அவதாரங்கள். ஆனால் நரஸிம்ம அவதாரம் அப்படிப்பட்டது இல்லை.

அதர்வண வேதம் ரொம்ப அழகாகச் சொல்கிறது - நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோமானால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹனுக்கும் அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர்.

 

தன்னை அடித்த ஹிரண்யனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் எம்பெருமான். மற்றொரு கையால் சிரஸைசிகையைக்கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம்.

 

ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினாராம் பரமாத்மா. ‘’இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே! இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம்என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தானாம். ‘சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம்என்று நினைத்தாராம்.

 

பகவானுக்கு எவ்வளவு காருண்யம் பாருங்கள்!

 

இவ்வளவு உக்கிரமாகத் தோன்றியவனுக்கே இத்தனை காருண்யம் என்றால், சாந்தமாகத் தோன்றுகிறவனிட்த்திலே எவ்வளவு காருண்யத்தை நாம் பார்க்கலாம்!

 

அவ்வளவு உக்கிரமாக வருகிறார் பரமாத்மா!

 

அவர் வரக் கூடிய வேகத்தைச் சொல்லும் போதுமேகம் எப்படிப் போகிறதோ அப்படி வேகமாகச் செயல் பட்டான்என்று வர்ணிக்கப்பட்டிருக்கிற்து.

அப்படி வேகமாகப் பாய்ந்து வந்தவன் ஹிரண்யனை ஒரு பிடி பிடித்து விட்டான்.அப்போதாவது வழிக்கு வருகிறானா என்று பார்ப்பதற்கு.  அப்புறம் தான் அவனை முடித்தார்.

 

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர் சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய்முலை யுண்டானே சப்பாணி

 

அளந்திட்ட தூண்! அவனேஹிரண்யனேஅளந்து இட்ட தூணாம். அது வேறு இடத்தைச் சொன்னால், ஏற்கனவே வந்து புகுந்து கொண்டு உட்கார்ந்திருப்பான் என்று, தானே பக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்தானாம் தூணை. தானே கட்டிய தூணைத் தேர்ந்தெடுத்தானாம்.

 

எப்பேர்ப்பட்ட தூண் அது…? தங்கச் செங்கல் வைத்துக் கட்டிய தூண். அந்தத் தூணைத் தட்டியதும் தோன்றினான் நரசிம்ஹன்.

 

ஸ்தம்பே அவதாரம் அப்படின்னு நரஸிம்ம அவதாரத்திற்கு ஒரு பெயர் உண்டு. ஒரு ஸ்தம்பம் தான் அதாவது தூண் தான் நரசிம்மரை பிரசவித்தது. இதை முக்கூரார் ஒரு உபன்யாஸத்தில் சொல்லியிருக்கார்.

 

 

ஹிரண்யனோடு சண்டை போட்டார். பலத்தைக் காட்டினார். அப்புறம் மடியிலே படுக்க வைத்துக் கொண்டு அவனை உளந் தொட்டான்.

 

அதாவது ஹ்ருதயத்தையும் தொட்டுப் பார்த்தான் பரமாத்மா! இத்தனை நாள் நம்மோடு சண்டை போட்டது, நம்மை வைது(திட்டி), நம்மைத் தூற்றியதெல்லாம் ஹ்ருதயத்தளவிலா இல்லாவிட்டால் வாயளவிலா?. வாயளவிலானால் விட்டு விடுவோம். ஹ்ருதயத்தளவில் இருந்தால் அவனை முடிப்போம். அப்போதும் பரீட்சை பண்ணிப் பார்க்கிறான் பகவான்.

 

ஹ்ருதயத்தளவில் எதிர்ப்பு இருந்ததால்தான் ஹிரண்யனை அவன் முடித்தான்.எத்தனை காருண்யம் அவனுக்கு!. இறுதி வரைக்கும் அவனிடத்தில் சரணாகதி பண்ண நமக்குச் சந்தர்ப்பம் தருகிறான்.

 

இதையே வேறு மாதிரியும் சொல்லலாம்.

 

அளந்திட்ட தூண்! தங்கச் செங்கல் கொண்டு ரத்தினங்கள் இழைத்த ஸ்தம்பமாம் அது. குழந்தை பிரஹலாதனை இழுத்து வந்து, பிரத்யேகமாய் அதைக் காட்டி கேட்டானாம் ஹிரண்யன். தானே அருகில் இருந்து கட்டுவித்த தூணில் நாராயணன் இருக்க முடியாது என்ற தீர்மானம் அவனுக்கு!

 

"ஏன் இருக்க முடியாது" என்று கேட்டது குழந்தை. உடனே அந்த இடத்திலிருந்து ஆவிர்பவித்தான் பரமாத்மா. சிம்ஹமாய் - நரம்கலந்த சிம்ஹமாய்த் தோன்றினான்.

 

ஏன் சிம்ஹமாய்த் தோன்ற வேண்டும்? புலியாக வரக்கூடாதா? என்றால், நாம் நினைக்கிற, விரும்புகிற ரூபத்தில் தோன்றுகிறவன் அவன். குழந்தை பிரஹலாதனை மடியில் உட்கார்த்திக் கொண்டு இரணியன் கேட்கிறான்:

"உலகிலேயே மிகவும் சாது யார்? என்று.

 

அப்போது பிரஹலாதன் "இதைத்தான் சாது என்று நினைக்கிறேன்.. என நரசிம்ஹனைச் சொன்னானாம். எனவேதான் அந்தக் குழந்தை விரும்பிய ரூபத்திலே எம்பெருமான் தோன்றினார்.

 

இப்போ ஏன் நரஸிம்ம அவதாரம் எடுக்கலை. உலகில் தீமை அதிகரித்துக் கொண்டே போகிறதே. அவதாரம் எடுக்க நேரம் இல்லையா இல்லை அவதாரமே பொய்யா என்று கேலி பேசும் நிலையில் இப்போ இருக்கிறோம்.

 

உண்மை தான். இப்பவும் நரஸிம்மர் அவதாரம் எடுக்க ரெடியாகத்தான் இருக்கார். ஆனால் பிரஹலாதன் போல் பக்தி செய்யக்கூடியவர் தான் யாரும் இல்லை. பரிபூரண சரணாகதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் பிரஹலாதனை பார்த்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

நான் இந்த வாளால் உன்னை வெட்டுகிறேன். உன் ஹரி வந்து உன்னை காப்பாற்றுகிறானா என்று ஹிரண்யகசிபு கேட்கும் போது பிரஹலாதன் கூறுகிறானாம். உன் வாள் வந்து என் தலையை தொடும் வரைக்கும் ஹரி வராமல் இருப்பான் என நினைக்கிறாயா என்று? அவ்வளவு ஒரு பரிபூரண சரணாகதி பகவானிடம்.

 

இது  போல பக்தி நமக்கு வர அந்த நரஸிம்மரை பிரார்த்தனை பண்ணுவோம்.



No comments:

Post a Comment