படித்ததில் பிடித்தது
''எங்கம்மா உங்க ஆத்துக்காரர், இன்னும் வரலியா?'' ராஜேஷ் கேலியாக கேட்க,
''ஏண்டா? உங்காத்துக்காரர்ன்னு சொல்றே? தோப்பனாரை இப்படியா சொல்றது? அவர் மேலே அப்படி என்னடா கோபம்?''
''கோபமா? செம கடுப்புல இருக்கேன். மூணு தலைமுறையா அம்பாளுக்கு சேவை பண்ணுற குடும்பம்ன்னு சொல்லியே என்னை வேதம் படிக்க வைத்தார்.''
''இப்ப என்னடா குறைஞ்சு போயிட்டே? அருமையா வேதம் கத்துண்டு, அழகா மந்திரம் சொல்றே, இயற்கையாகவே நம்ம குடும்பத்துக்கு ஆச்சாரம், பயபக்தி எல்லாம் நிரம்ப உன்கிட்ட இருக்கு. அப்புறம் ஏன் மனசு மாறி அல்லாடுறே?''
''அம்மா! என்னையும் உங்களை மாதிரி குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டிண்டு, காலம் கழிக்கச் சொல்றியா? என் வயசு பையன்களை பார், அழகா படிச்சு முடிச்சு வெளியிலே வேலை பார்க்கிறா!''
''உனக்கு என்னடா குறை? கற்பூர புத்தி! வேதம் படிச்சாலும், ஒரு பக்கம் காலேஜிேல போய் படிச்சு பி.காம். முடிச்சுட்டு நம்ம குடும்பத்திேல முதல் பட்டதாரி நீதாம்ப்பா! அந்த அம்பாள் கருணை உனக்கு ரொம்ப இருக்குப்பா.''
''முயற்சி என்னோடதும்மா. உங்க பேச்சைக் கேட்டா உண்ட கட்டியும், புளியோதரையும் தின்னுட்டு உள்ளூர் கோயிலில் மணியடிச்சிண்டு காலங்கழிக்க வேண்டியதுதான். நான் நல்ல வேலை கிடைச்சா வெளியூர் போயிடுவேன். இந்த பொன்னாக்குடி கிராமத்தை நீங்களே கட்டிண்டு அழுங்கோ'' என்றான் எரிச்சலோடு.
மனம் வலித்தது. ''அம்மா தாயே.... கற்பகாம்பா.... நீதான் இவனை திருத்தணும். உனக்கு சேவை பண்ணுற பாக்கியத்தை பாரமா நினைக்கிறான். இவன் மனசு மாறணும்'' கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் விரும்பிய வாழ்க்கை இந்த கிராமத்தில் இல்லை என்பது மட்டும் நன்றாக புரிந்தது.
''கணேசா! என்னப்பா இன்னும் கோயில் நடை சாத்தலையா?''
''குரு.... உனக்கு தெரியாததா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. வெளியே போறவா வீடு திரும்பறச்சே கோயில் நடைதிறந்திருந்தா அம்பாளை சேவிச்சுண்டு போயிடலாமேன்னு நினைப்பா. அதான் வெள்ளி, செவ்வாய், ஞாயிறும் சேர்த்து மூணு நாள் மட்டும் ஒன்பது மணி வரை நடை தொறந்து வச்சிருக்கேன். மத்த நாள் எட்டரை மணிக்கு நடை சாத்திடுவேன்.''
''உன்னை மாத்த முடியாது கணேசா. நாட்டிேல இன்னும் மழை பெய்யுதுன்னா உன்னைப்போல ஆட்கள் இருக்கிறதுனாலதான்'' என்று சிரித்தார் குருமூர்த்தி. குருமூர்த்தி, கணேசனின் நெடுநாளைய நண்பர். இருவரும் சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்தவர்கள்.
பொன்னாக்குடி கிராமம் சிறியதாக இருந்தாலும், கற்பகாம்பிகை அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு வந்த பெண்களுக்கு திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருவதால், வெள்ளி, செவ்வாயில் கூட்டம் அதிகமாக வரும். இந்த கோயிலில் கணேச குருக்களின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக சேவை செய்து வருகின்றனர்.
''கணேசா! நம்ம ராஜேஷை நேத்து பார்த்தேன். சரியா பேசலை. சந்தோஷமா இல்லாத மாதிரி தெரிஞ்சுது. என்னப்பா விஷயம்? ஏன் சோர்வா இருக்கான்?'' மகனை பற்றிய பேச்சை குருமூர்த்தி எடுத்ததும் கணேச குருக்களின் முகம் சுருங்கியது.
''சின்ன வயசிலே என் பேச்சைக் கேட்டான். வேதம் படிச்சான். அவன் ஆசைப்படி பி.காம் படிச்சான். புத்திசாலிப் பையன்தான். காலேஜிலே மெடல் வாங்கினான்.''
''கணேசா! அவனுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறைய இருக்கு.''
''குரு.... அவன் லட்சுமி கடாட்சத்தை இல்ல எதிர்பார்க்கிறான்? கோயில் கைங்கர்யத்தை விட்டு, வெளியூர் போய் வேலை பார்க்க நினைக்கிறான். நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைப்படுறான். நான் என் காலத்தை என் தோப்பனாரைப் போல அம்பாள் சேவையிலேயே கழிச்சிட்டேன். எனக்கு பிறகு என் மகன் அம்பாள் சேவைக்கு வரணும்னு நினைக்கிறேன்.''
''கணேசா.... நீ சொல்றது சரி. ஆனா உன் மகனை அவன் விருப்பம் இல்லாம கட்டாயப்படுத்துறது சரியில்லேன்னு தோணுது. அவன் ஒண்ணும் தப்பான வழியிலே போகலையே? அவன் உழைச்சு சம்பாதிச்சு வசதியா வாழணும்னு நினைக்கிறான். அது ஒண்ணும் தப்பில்லையே?''
''சரி விடு குரு. இந்த ஆத்தா என்ன நினைக்கிறாளோ அதுபடி நடக்கட்டும். அவளே அவனுக்கு வழிகாட்டட்டும்'' என்று விரக்தியாக பேசியவர். கோயிலைப் பூட்டி, சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டு, குருமூர்த்தியுடன் வீடு நோக்கி நடந்தார்.
மறுநாள் காலை அருகில் வந்து நின்ற மகனை ஏறிட்டவர், ''என்னப்பா, ஏதாவது வேணுமா?'' என்றார்.
''அப்பா. சென்னை
யிலே ஒரு நல்ல கம்பெனியிலே ஒரு வேலைக்கு கால்பார் பண்ணியிருந்தாங்க. அப்ளை பண்ணியிருந்தேன். இண்டர்வியூ கார்டு வந்திருக்கு. அதான் நாளை சென்னைக்கு போகணும். டிராவல் அலவன்ஸ், அக்காமடேஷன் எல்லாம் பின்னால் கிளெய்ம் பண்ணிக்கலாம்.''
''சரிப்பா... பேஷா போயிட்டு வா'' என்றவர் பையிலிருந்து 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். குருமூர்த்தியின் வார்த்தைகள் ஏற்படுத்தின பாதிப்போ என்னவோ ஒன்றும் பேசவில்லை.
இரவு சென்னை கிளம்பிய ராஜேஷை நெற்றியில் விபூதி பூசி ஆசீர்வாதம் பண்ணிய அம்மா ரஞ்சிதத்திடம் ''என்ன உங்க ஆத்துக்காரர் சைலண்டா ஆயிட்டார்? வழக்கமான அர்ச்சனை ஒண்ணும் காணோம்?'' என்றான் கிண்டலாக. ரஞ்சிதம் பதில் சொல்லாமல் ''நல்லபடியா போயிட்டு வாப்பா'' என்றாள்.
சென்னையை அடைந்தவன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கினான். குளித்து, முடித்து இன்டர்வியூவுக்கு ரெடியானான். பர்சை எடுத்தவன் அதில் வைத்திருந்த கற்பகாம்பாளின் படத்தை எடுத்து, கும்பிட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டு, ''தாயே எனக்கு நல்ல வழி காண்பி'' என வேண்டிக் கொண்டான்.
10 மணிக்கெல்லாம் அலுவலகத்தை அடைய அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியானான். ஒரு வேலைக்கு 2000 பேரா என திகைத்துப் போனவன். நம்பிக்கை தளர்ந்து திரும்பி விடுவோமா என்று நினைத்தான். பின் சரி காத்திருந்து முதல் இரண்டு லெவல்களை தாண்ட முடிகிறதா என பார்ப்போம் என நினைத்தான். முதல் இரண்டு நிலைகளை கடந்த பின், கூட்டம் 500 பேராக குறைந்து விட்டது. அங்கு வந்த ஒருவர் –
''சார், உங்க பேர் தானே ராஜேஷ்? உங்களை எங்க எம்.டி. பார்க்க விரும்புறார். என் கூட வாங்க'' என அழைக்க திகைப்புடன் ராஜேஷ் அவரை தொடர்ந்தான்.
அவனை வரவேற்ற எம்.டி., ''மிஸ்டர் ராஜேஷ். உட்காருங்க. முதல் இரண்டு லெவலை தாண்டினதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் ரெசியூமை பார்த்தேன். ஊர் பொன்னாக்குடி. அப்பா கணேச குருக்கள் என்று போட்டிருந்தது. உங்க ஊர் கற்பகாம்பாள் கோயில் பேமஸ் இல்லே?''
எதுவும் புரியாமல் ராஜேஷ் ''ஆமாம் சார். நான் கணேச குருக்கள் பையன்தான் சார்.''
''உங்கப்பா மாதிரி கோயில் பூஜையிலே விருப்பம் இல்லையா?'' கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்ட ராஜேஷ் எம்.டி.யை பார்த்து...
''சார்... நானும் வேதம் படிச்சிருக்கேன். கோயில் பூஜை, ஹோமங்கள் எல்லாவற்றிற்கும் அப்பா கூட போய் கலந்துக்குவேன் ஆனா...''
''ஆனா உங்களுக்கு உங்க வயசு பசங்க மாதிரி ஆபீஸ்ல வேலை பார்க்கணும்னு ஆசை. இல்லையா ராஜேஷ் உங்கள் ரெசியூமை பார்த்து நீங்க ரெண்டு லெவலை தாண்டும் வரை காத்திருந்தேன். உங்களுக்கு இந்த ஆபீஸ்ல வேலை இல்லேன்னு சொன்னா வருத்தப்படுவீர்கள்தானே ராஜேஷ்?''
ராஜேஷ் உண்மையிலேயே மனம் உடைந்து போனான். ரெண்டு லெவல்களை தாண்டிய பிறகு, துளிர்விட ஆரம்பித்த நம்பிக்கை, எம்.டி. கூப்பிட்டுப் பேசியதும் அதிகமாக, அவர் ஒரேயடியாக வேலை இல்லையென்றதும் நொந்து போனான்.
''மிஸ்டர் ராஜேஷ்! உங்களுக்கு ஒரு சம்பவத்தை நான் சொல்லியாகணும். ஐந்து வருடங்களுக்கு முன் என் மகளுக்கு திருமணம் தள்ளிப் போகிறது என என் மனைவி வருத்தப்பட்டு கொண்டிருந்த சமயம், உங்கள் ஊர் கோயிலைப்பற்றிக் கேள்விப்பட்டு, மஞ்சள் மாலை, அர்ச்சனை சாமான்களுடன் கோயிலுக்கு வந்தோம். பிரார்த்தனையை முடித்துவிட்டு அர்ச்சனை செய்தோம். அப்படி அர்ச்சனை செய்யும் போது உங்கள் தந்தை அர்ச்சனை தட்டில் எதையோ மாற்றி வைப்பதைப் பார்த்தேன். என் மனைவி பிராகாரம் சுற்ற போயிருந்த போது, அதை உங்கள் தந்தையிடம் கேட்டு கோபப்பட்டேன். அதற்கு உன் தந்தை கூறிய பதில் என்னை சிந்திக்க வைத்தது.
'ஐயா, நீங்க கொண்டு வந்த அர்ச்சனை தட்டில் இருந்த தேங்காய் அழுகி இருந்தது. தெரிஞ்சா அம்மா வருத்தப்படுவாங்களேன்னு தான் அதை எடுத்துட்டு நல்ல தேங்காயை வைத்தேன். உங்களுக்குன்னு இல்லை யாருக்கு தேங்காய் அழுகி இருந்தாலும் மாற்றிடுவேன். எனக்கு இது தவறா தெரியலே. நம்பிக்கையோடு இந்த கோயிலுக்கு வர்றவங்களுக்கு சகுனத்தடையா ஒரு காரியம் நடந்தா வருத்தப்படுவாங்க. மனசஞ்சலத்தோடு வீட்டுக்கு போவாங்க. அதைவிட தேங்காயை மாற்றிவிட்டு அவங்களுக்காக இந்த தாய்கிட்ட தனியா வேண்டிக்குவேன்' என்றார்.
பிறருடைய உணர்வுகளுக்கு இவ்வளவு துாரம் மதிப்புக் கொடுக்கும் உத்தமரை நான் பார்த்ததில்லை. மேலும் வரும் வழியிலெல்லாம் கார் டிரைவரும் அவரைப்பற்றி உயர்வாக பேசிக் கொண்டு வந்தான். அப்பேர்பட்ட உத்தமரின் மகன் நீ. உனக்கு இங்கு வேலை இல்லை என்றுதான் சொன்னேனே தவிர, வேலையே இல்லை என்று சொல்லவில்லை. லண்டனில் நானும், என் தமிழ் நண்பர்களும் சேர்ந்து ஒரு லட்சுமி நரசிம்மர் கோயிலை கட்டியுள்ளோம். அங்குள்ள அம்மனுக்கு பூஜை செய்ய நல்ல ஆளை தேடிக் கொண்டிருந்தோம். நீ வேதமும் படிச்சிருக்கே, கிராஜுவேஷனும் பண்ணியிருக்கே. மேலும், நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கும் கணேச மூர்த்திகளின் மகன் நீ. அந்த ஒரு தகுதி போதும். அந்த நல்ல மனிதருக்கு நான் செய்யும் உதவின்னு வச்சுக்கோ.
உனக்கு இந்திய ரூபாயில் இரண்டு லட்சம் சம்பளம். போக போக கூடும். இது அம்பாள் பூஜைக்கு. மேலும் நீ விருப்பப்பட்டால் கோயில் ஆபீசில் அக்கவுண்ட் செக்க்ஷனிலும் பார்ட் – டைம் வேலை பார்க்க நான் ஏற்பாடு பண்றேன். தங்குமிடம், சாப்பாடு நாங்கள் ஏற்பாடு பண்ணிடுவோம். மூன்று வருட கான்டிராக்ட். நீ போறியாப்பா?'' நடந்ததை நம்ப முடியாத அதிர்ச்சியில் தலையசைத்தான்.
ஊர் திரும்பியவன், அப்பாவின் கால்களில் விழுந்து கதறினான். பதறிப் போனார் கணேச குருக்கள்.
''அப்பா...... என்னை மன்னிச்சிடுங்க. உங்க உயர்வான குணத்தை மதிக்க தவறிட்டேன். உங்களை, நம்ம ஊரை, கோயிலை, குலத்தொழிலை மரியாதை குறைவா பேசியிருக்கேன். ஆனா அந்த அம்பாள் ஆசீர்வாதமும், உங்களுடைய உன்னத குணமும்தான் எனக்கு நான் விரும்பிய வாழ்க்கையை பெற்றுத் தந்திருக்கிறது'' என்றவன் நடந்ததை கூறினான்.
கணேச குருக்கள் கோயிலை நோக்கி கைகூப்பியவர், ''தாயே! உன் கருணையே கருணை...! அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையையும் கொடுத்து, அவன் தெய்வ கைங்கர்யம் செய்யணும்கிற என் விருப்பத்தையும் நிைறவேத்திட்டே. இந்த கருணைக்கு நான் என்ன கைமாறு செய்வேன்!'' என்று கூறியவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

No comments:
Post a Comment