Tuesday, May 18, 2021

இது ஒரு உண்மை நிகழ்வு.



டேய் யஷ்வந்த் உன்னை பார்க்க உன்னோட அம்மா அப்பா வந்திருக்காங்கடா என்றபடியே குரல் கொடுத்து உள்ளே ஓடினான் மணி சர்மா.


யஷ்வந்திற்கு 7 வயது தான் ஆகிறது. வேதபாடசாலைக்கு வந்து சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. இப்போது தான் த்ரிகால ஸந்தியும், சமிதாதானமும் ஒழுங்கா பண்ணிக் கொண்டு இருக்கிறான். அதற்குக் காரணம் மணிசர்மா தான்.


மணிசர்மாவிற்கு 15 வயதிருக்கும். அவனுடைய வேலையை இந்த மாதிரி பாடசாலையில் சேரும் புது வித்யார்த்திகளிடம் பேசி அவர்களுடைய மனதை திசை திருப்புவது தான். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் சில வித்யார்த்திகளுக்கு உண்டு. கோபப்படாமல் ராத்திரி எந்த நேரமாக இருந்தாலும் சிறுநீர் கழித்த வித்யார்த்தியை எழுப்பி உடைமாற்ற சொல்லி மீண்டும் உறங்க வைக்கும் பணியையும் சேர்த்து செய்வான் மணிசர்மா. சுருக்கமாக சொல்லப் போனால் தாய் தந்தையரை விட்டு பிரிந்து வேதபாடசாலையில் வேதம் கற்க வந்திருக்கும் குழந்தைகளுக்கு தாய் போன்றவன்.


மணிசர்மா பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனென்றால் அவன் தான் இந்த சம்பவத்தின் நாயகன். மோண்டியா கிராமத்தில் மணிசர்மாவின் பெற்றோர்கள் இருந்தார்கள். வைதீக காரியங்களிலும், சுபநிகழ்ச்சிகளிலும் சமைக்கும் வேலை இருவருக்கும். ஓரளவு வருமானம் வந்து கொண்டிருந்த வேளையில் மணிசர்மாவின் அம்மாவுக்கு நுரையீரல் புற்று நோய் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். மூன்று மாத காலம் போராடியும் டாக்டர்களும் கைவிரிக்க, உயிர் பிரிந்தது. மனைவி பிரிந்த ஏக்கத்தில் ஆறுமாத காலம் பித்து பிடித்தவர் போல் இருந்த மணிசர்மாவின் தந்தையும் திடீரென நெஞ்சுவலியால் போய் சேர அநாதையாக மணிசர்மா ரோட்டில் நிற்கிறான்.


தாயாதிக்காரர்கள் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய வைதீக காரியங்களை முறைப்படி செய்ய ஒரு வாத்யாரை வரவழைத்திருந்தனர். அவரும் திருப்தியாக அனைத்து காரியங்களையும் எந்த ஒரு குறைவும் இல்லாமல் செய்து முடித்தார். இப்போது எஞ்சி இருப்பது மணிசர்மா, வாத்யார், தாயாதிக்காரர்கள் மட்டுமே.


மணிசர்மாவை யார் பார்த்துக் கொள்வது என்ற பஞ்சாயத்து ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்ல எந்த பக்கம் போவது என்று தெரியாமல் மணிசர்மா முழிக்கிறான். அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை. யாரிடம் போய் அழுவது. யாருக்கும் வரக்கூடாத நிலைமை அது. வயதோ 7 தான் ஆகிறது. 


அந்த நேரத்தில் நிலைமையை உணர்ந்த வாத்யார் நான் சிக்மகளூரில் இருக்கிறேன். பாடசாலை வைத்திருக்கிறேன். 25 வருடத்திற்கும் மேல் ஆச்சு எனக்கு கல்யாணமாகி. ஆனா இன்னும் பகவான் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கவில்லை. யாருக்கும் ஆட்சேபணை இல்லைனா இந்த குழந்தையை என்னோட குழந்தையா நான் வளர்க்கிறேன். இவனுக்கு வேதம் கற்றுக் கொடுத்து இவனை ஒரு கனபாடியாக ஆளாக்கி விடுகிறேன். நீங்க எப்ப வேணும்னாலும் இவனை வந்து பார்க்கலாம்னு வேண்டுகிறார்.


எப்படியோ சனியன் ஒழிஞ்சா சரி தான் அப்படின்னு உறவினர்களும் சரி பேஷா நீங்க பார்த்துக்கோங்க அப்படின்னு வாத்யாரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு ஊரைப் பார்க்க கிளம்பிட்டார்கள்.


வந்த சிலநாட்கள் அம்மா அப்பா நினைவிலேயே அழுது கொண்டு இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தான். அங்கிருக்கும் வித்யார்த்திகளுடன் சேர்ந்து இவனும் வேதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். நேரம் கிடைக்கும் போது வாத்யாருக்கு செய்ய வேண்டிய பணிகளையும் செய்து கொடுத்தான்.


வருடங்கள் உருண்டோடின.


பரீட்சைகள் வைத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைய ஊர்களில் இருந்து வேத வித்துக்களும், வித்யார்த்திகளின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள். அங்கு மணிசர்மா ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்த சில பெற்றோர்கள் யார் இந்த சிறுவன்? இப்படி பிரம்ம தேஜஸாக இருக்கிறானே? எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்கிறானே என்று வினவ ஆரம்பித்தார்கள்.


ஒரு வழியாக வாத்யாரை அணுகி மணிசர்மா பற்றி விசாரித்தார்கள். அவனுடைய அம்மா அப்பா பற்றி கேட்ட அவர்கள் அதிர்ந்து போனார்கள். சான்றிதழ் வாங்கிய விழா முடிந்ததும் சில பெற்றோர்கள் மணிசர்மாவிடம் விடுமுறைக்கு தங்களுடன் வரும்படி அழைத்தனர். மணிசர்மா உடனே அதை மறுத்து விட்டான். பலரும் பலமுறை வற்புறுத்தியும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தான். கடைசியில் அவன் சொன்ன காரணதை கேட்டு வந்தவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள்.


அவன் சொன்னது இது தான்.


//எல்லோரும் லீவுக்கு ஊருக்கு போய்விட்டால் வாத்யாரை யார் பார்த்துப்பது? அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார். என்னை அவர் வளர்த்து வந்தால் கூட ஒரு குருவை அருகில் இருந்து கவனிப்பது சிஷ்யனின் வேலை அல்லவா? அந்த வேலையை நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்யவேண்டும். அது போக என்னுடைய அறியாத வயதில் தாய், தந்தையரை இழந்து விட்டேன். அது அவர்கள் விதி. இறைவன் கொடுத்ததை அவனே எடுத்துக் கொண்டான். ஆனால் என்னுடைய குருவை இழக்க நான் விரும்பவில்லை. எனக்கு குருவை விட்டால் வேறு யாரும் இல்லை. வேற யாரும் தேவையும் இல்லை. இதை நான் தலைக்கனத்துடன் சொல்லலை. குரு இல்லாமல் நான் இல்லை. அவரை பிரிந்து ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியாது.//


இது தான்  குருபக்தி. குரு சிஷ்யனுக்கும் உள்ள உறவு.

No comments:

Post a Comment