சில தினங்கள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. அதில் ஒன்று தான் அன்னையர் தினம் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களும்.
எதுவாக இருந்தாலும் அமெரிக்காவை பின்பற்றுகிறோம், ரஷ்யாவை பின்பற்றுகிறோம் என்று சொல்பவர்கள் சாஸ்திரம் என்று வந்து விட்டால் மட்டும் அவர்களை பின்பற்றுவதில்லை. அங்கெல்லாம் அம்மா, அப்பாக்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் நமது நாடு அப்படிப்பட்டது இல்லை. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து பழகிய இடம். இப்போது பாதி உறவு முறைகள் பெரியவர்களுக்கு கூட தெரிவதில்லை. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை பையன், பெரியப்பா பையன் என்று ஒரு கும்பலாக இருந்த நாம் இப்போது அதை தொலைத்து விட்டு நிற்கிறோம். காரணம் நாம் ஆங்கிலேயர்களை பார்த்து அவர்கள் வழியை பின்பற்றுவதால் தான்.
அன்னையர் தினம், மகளிர் தினம், உலக வேஷ்டி கட்டும் தினம், ஓடிப்போன நாத்தனார் தினம் என்று ஆளாளுக்கு ஒரு தினம் வைத்து அதை முறை வைத்து கொண்டாடுகிறார்கள்.
ஒரு பழமொழி சொல்வார்கள். ஆத்தா மானம் காற்றில் பறக்க மகன் கும்பகோணத்தில் வஸ்திரதானம் பண்ணினானாம். அது போலத் தான் இருக்கு இப்போதைய கால கட்டங்கள்.
இன்னும் சிலரோ காலையில் எழுந்து குளித்து மனைவி மக்கள் புடை சூழ முதியோர் இல்லத்துக்கு சென்று அங்கு இருக்கும் தன்னுடைய அன்னைக்கு வாழ்த்தை சொல்லி வந்து விடுகிறார்கள்.
எத்தனையோ பழக்க வழக்கங்களை நாம் மறந்து விட்டதன் பலன் தான் இது போன்ற தினங்கள்.
பழைய காலங்களில் எந்த ஒரு விஷயத்திற்காக வெளியில் கிளம்பினாலும் வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவிற்கு நமஸ்காரம் பண்ணி விட்டு தான் வெளியில் கிளம்புவார்கள். அது போலவே வெளியில் சென்று விட்டு வந்ததும் நடந்த விஷயங்களை அம்மா அப்பாவிடம் வந்து சொல்வார்கள். அப்போதெல்லாம் இந்த அன்னையர் தினங்கள் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லையே.
தினமும் அன்னையிடம் பரிவுடன் பேசுங்கள். அது ஒன்றே போதும். இது மாதிரி யாரோ கிளப்பி விட்ட புரளிகளை நம்பாதீர்கள்.

No comments:
Post a Comment